மன்னிப்பு என்பது
மன்னிப்பு கேட்கும்படி
அப்புவுக்கு நான் கற்பித்த நாளில்
மன்னிப்பு என்றால்
என்னவென்று கேட்கிறான்
ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா
மன்னிப்பு என்பது
ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும்
அதிகபட்ச தண்டனையென்று
அது வலிமையுள்ளவர்கள்
வலிமையற்றவர்கள்மேல் செலுத்தும்
அதிகாரம் என்று
வலிமையற்றவர்கள்
தமது இயலாமைக்குத்
தாமே வழங்கிக் கொள்ளும்
சமாதானமென்று
கடவுள்களின் ஓய்வு நேரப்
பொழுது போக்கு என்று
பந்தயத்தில் தோற்ற குதிரையை
உயிரோடுவிடுவது என்று
மரண தண்டனைக் குற்றவாளிக்குத்
தூக்கு மேடையில் வழங்கப்படும்
கருணை என்று
ஒரு முடிவற்ற துன்பத்திற்கு
நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்வது என்று
எளிய தேவைகளுக்காக செய்துகொள்ளும்
சமூக உடன்படிக்கை என்று
கன்னத்தில் அறைந்தவர்களுக்கு
மறுகன்னத்தைக் காட்டுவது என்று
படுக்கையறையில்
மண்டியிடுதல் என்று
ஒரு இந்தியன் கண்டுபிடித்த
வினோத தத்துவம் என்று
பிரார்த்தனைகளின்
மையப் பொருள் என்று
ஒரு புரட்சியாளனால்
உதாசீனப்படுத்தப்படுவது என்று
இன்னொரு சந்தர்ப்பம்
அளிக்கும் முயற்சி என்று
இன்னொரு பக்கத்தைப்
புரிந்துகொள்வது என்று
தண்டனையை
ஒத்தி வைப்பது என்று
நண்பர்களுக்குத் தரும்
சிறந்த பரிசு என்று
ஒரு துரோகத்தை
அறியாததுபோல் நடிப்பது என்று
எந்தத் தவறும் செய்யாத போதும்கூட
கேட்கப்படுவது என்று
பெரும்பாலான சமயங்களில்
மறுக்கப்படுவது என்று
ஒருவரை அச்சத்திலிருந்து
விடுவிப்பது என்று
ஒருவரை நிரந்தரமாக
அடிமைப்படுத்துவது என்று
மறதியின்
இன்னொரு பெயர் என்று
அடிக்கடி பயன்படுத்தப்படும்
ஒரு அர்த்தமற்ற சொல் என்று
மிகவும் எளிய
ஒரு தந்திரமென்று
ஒரு போதைப்பொருள்
என்று
மன்னிக்கவே முடியாத ஒன்றை
மன்னிப்பது போல் பாவனை செய்வது என்று
ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா
மன்னிப்பு என்பது
இறுதியில்
ஒரு கண்ணீர்த்துளி
மட்டுமே என்று
=
வியூகத்திற்குள் இருக்கும்போது
வியூகத்திற்குள்
நீங்கள் இருக்கும்போது
நாம் ஆயுதபாணியா
நிராயுதபாணியா என்று
எப்போதும் யோசிக்கிறீர்கள்
உங்கள் ஆயுதங்களை
நீங்கள் பயன்படுத்தக்
கற்றுக் கொள்வதற்குள்
யுத்தம் முடிவுக்கு வந்துவிடலாம்
சரணடைவதா
எதிர்த்துப் போரிடுவதா
என்று ஏன் உடனடியாக
முடிவெடுக்க விரும்புகிறீர்கள்
யுத்தத்தில்
நீங்களாக எடுக்கும்
எந்த முடிவும்
உங்களது கற்பனைகள் மட்டுமே
வியூகத்திற்குள் இருக்கும்போது
எதிரியின் பலம் குறித்தும்
பலவீனம் குறித்தும்
ஏன் இவ்வளவு சிந்திக்கிறீர்கள்
எதிரியும்
தன்னைப் பற்றி
அவ்வளவு குழப்பங்களுடன்தான்
சிந்தித்துக்கொண்டிருக்கிறான்
உடைத்துத் திறக்கக்கூடிய
ஒரே ஒரு அரணைப் பற்றி
உங்கள் வரைபடத்தில்
துல்லியமாகக் குறிக்கிறீர்கள்
அதுதான் உங்களுக்கு
விரிக்கப்பட்ட
மரண வலையாகவும் இருக்கலாம்
இல்லையா?
வியூகத்திற்குள் இருக்கும்போது
நான் முதலில்
சிந்திப்பதை நிறுத்தி விடுகிறேன்
சிந்திப்பதை நிறுத்தும்போது
நாம் பயப்படுவதும்
நின்று விடுகிறது
அப்போது நான்
ஒரு பியர் பாட்டிலையோ
ஒரு புத்தகத்தையோ
திறக்கிறேன்.
அவை நமக்கு முதலில்
மறதியைக் கொண்டு வருகின்றன
பிறகு
அதன் வழியே விடுதலையை
வியூகத்தில் இருக்கும்போது
நான் புதிதாக ஒரு பெண்ணைக்
காதலிக்கத் தொடங்குகிறேன்
அது நம்மைப்
புதிதாக வேறொரு வியூகத்திற்குள்
செலுத்தி விடுகிறது
வியூகத்தில் இருக்கும்போது
தியானம் செய்வதோ
இயற்கை உணவுகளை சாப்பிடுவதோ
’ஜிம்’மிற்கு செல்வதோ
மிகவும் நல்லது
நாம் ஏதாவது ஒன்றைத்
தீவிரமாகப் பின்பற்றாவிட்டால்
வியூகத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிடும்
வியூகத்திற்குள் இருக்கும்போது
புதிதாக நீங்கள்
ஒரு செல்போனையோ
காரையோ வாங்குவது சிறந்தது
வியூகத்தின்போது
நம்மிடம் இருந்து பறிக்கப்படுபவை
எதுவென்று நமக்குத் தெரியாது
வியூகத்தில் நீங்கள்
அபிமன்யுவைப்போல
திகைத்துப் போய்விடுகிறீர்கள்
கிறிஸ்துவைப்போல
அமைதியாக ரத்தம் சிந்துங்கள்
சிலுவையில் தொங்கியபடி
எதிரியின் பாவங்களை மன்னியுங்கள்
வேறெப்படியும்
வியூகத்திலிருந்து
வெளியேற முடியாது
வியூகத்தில்
எதிர்த்துப் போரிட
நீங்கள் ஒரு சத்ரியனோ
போராளியோ அல்ல
நீங்கள் வெறுமனே
இந்தக் கவிதையைப்
படிப்பவர்
அல்லது
எழுதுபவர்தானே
=
யாரோ கவனிக்கும்போது
யாரோ கவனிக்கிறார்கள்
என்று தெரிந்ததும்
காதலர்கள் அந்த இடத்திலிருந்து
நகர்கிறார்கள்
ஒரு இளம் பெண் தனது உடலில்
குறுகுறுப்பை உணர்கிறாள்
பேருந்தில் ஒருவன்
செல்போனை அணைத்துவிடுகிறான்
இரண்டு பேர் மிகவும் தாழ்ந்த குரலில்
சண்டையிடத் தொடங்குகிறார்கள்
குழதைகளின் இயல்பு
திடீரென மாறி விடுகிறது
அழகற்ற ஒருத்தி
மனம் உடைந்து அழுகிறாள்
ஒரு சிறு பையன்
சிகரெட்டைக் கீழே போட்டுத் தேய்க்கிறான்
மனப்பிறழ்வு கொண்ட ஒருத்தி
எல்லா சாவித்துவாரங்களையும் அடைக்கிறாள்
இளைஞர்கள் மிகவும் உயரமான
இடத்திலிருந்து குதிக்கிறார்கள்
ஒரு மூதாட்டி மீண்டும்
அதே கதையைச் சொல்லத் தொடங்குகிறாள்
பூச்சாடியில் மலர்கள்
சரி செய்யப்படுகின்றன
கலைந்த முகங்கள்
நேர்த்தியாக்கப்படுகின்றன
பத்திரிகையில் ஒரு திருத்தம்
வெளியிடப்படுகிறது
மருந்துக்கடையில் ஒருத்தி
எதையோ வாங்க மிகவும் நாணமடைகிறாள்
அரவமற்ற சாலையில்
ஒருவன் வேகமாக நடக்கத் தொடங்குகிறான்
குடிபோதையில் நிராதரவாய் கிடந்த யாரோ
முனகத் தொடங்குகிறான்
மதிய வெயிலில் தியானித்த காகம்
சட்டென எழுந்து பறக்கிறது
ரயிலில் குருட்டுப் பிச்சைக்காரி
இன்னும் உருக்கமாகப் பாடுகிறாள்
யாரோ பாதிப் புணர்ச்சியில்
திடுக்கிட்டு எழுந்துகொள்கிறார்கள்
ஒரு கொலைகாரன்
தன்கத்தியை மறைத்து வைக்கிறான்
கோமாளிகள் இன்னும் சிரிக்கவைக்கப்
போராடுகிறார்கள்
சொற்பொழிவாளன் மேலும்
குரலை உயர்த்துகிறான்
ஒரு தவம்
கலைகிறது
குடியரசு தின அணிவகுப்பில்
நாட்டின் தலைவர் கொட்டாவியை
அடக்கிக்கொள்கிறார்
ஒரு வேசி
மெலிதாகப் புன்னகைக்கிறாள்
ஏழ்மையை மறைக்க
ஒருவன் வீணே பொய் சொல்கிறான்
மைதானத்தில் அவசர அவசரமாக
ரத்தக்கறைகள் கழுவப்படுகின்றன
கடையில் அவ்வளவு மெலிதான
ஆடையை ஒருத்தி தேர்ந்தெடுக்கிறாள்
சிலர் பணத்தைப்
பத்திரப்படுத்துகிறார்கள்
சரித்திரத்தில் இடம்பெறுவதற்கான
தீவிரத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன
முற்றாக நம்பிக்கையிழந்தவர்கள்
ஏதேனும் உதவி கிடைக்கலாம்
என்று மீண்டும் நம்பத் தொடங்குகிறார்கள்
யாரோ கவனிக்கிறார்கள்
என்று தெரிந்ததும்
எல்லோருமே
தங்கள் சுதந்திரத்தைக்
கொஞ்சம் இழக்கிறார்கள்
=
நினைவூட்டல்களின் காலம்
உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் வருத்தமானது
ஒருவருக்கும்
திரும்பிப் பார்க்க
ஒன்றுமில்லாத
ஒரு காலத்தில்
உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் அவமானகரமானது
கொடுத்ததைப்
பெற்றுக்கொண்டதை
அர்ப்பணித்துக்கொண்டதை
இழந்து வந்ததை
கண்துஞ்சாமல் இருந்ததை
கணக்குகள் பார்க்காதிருந்ததை
சிதறியதைக் கோர்த்துத் தந்ததை
உடைந்தவற்றை ஒட்டியதை
*
உனக்கு நினைவூட்டினால்தான்
நீ நினைத்துப் பார்ப்பாயா?
எல்லாவற்றையும் மாற்ற முடியும்
என்ற அப்போதைய நம்பிக்கைகளை
உண்மையாகவே கொஞ்சம் மாற்றியபோது
அடைந்த உவகைகளை
சாய்ந்துகொள்ளக் கிடைத்த தோள்களே
போதுமாக இருந்த நம் பயணங்களை
ஒரு பிடிமானமும் அற்று வீழ்ந்தபோது
அந்தரத்தில் தாங்கிய கைகளை
*
உனக்கு நினைவூட்டினால்தான்
இப்போது கொஞ்சம் கருணை காட்டுவாயா?
இதைவிடவும் பெரிய கஷ்டங்களைத்
தாங்க முடிந்ததை
இதைவிடவும் பெரிய தவறுகளை
மன்னிக்க முடிந்ததை
பெரியதாகத் தோன்றிய
நமது சிறிய காதல்களை
அப்போது சிறியதாகத் தோன்றிய
நம் பெரிய வாதைகளை
*
உனக்கு நினைவூட்டமுடியாவிட்டால்
நானும் அதை மறந்து போகவேண்டுமா?
இனி திரும்பப் பெற முடியாத
ஒரு காலத்தை
இனி மீட்கமுடியாத
ஒரு பருவத்தை
இனி கண்டுபிடிக்கமுடியாத
நம் அதிர்ஷ்டங்களை
இனி நிரூபிக்கமுடியாத
சில நியாயங்களை
உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் வருத்தமானது
நினைத்துப் பார்ப்பதன் விலையை
யாரும் செலுத்தத் தயாரில்லாத
ஒரு காலத்தில்
அல்லது
மறதி மிக மிக மலிவாகக் கிடைக்கும்
ஒரு காலத்தில்
உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் அவமானகரமானது
=
சாரதிகள்
சாரதிகள்
காத்திருக்கிறார்கள்
எல்லா இடங்களிலும்
வாகனத்தின்
ஒரு கதவைத் திறந்து வைத்தபடி
செய்தித்தாளின் படித்த செய்தியையே
மறுபடி படித்தபடி
பாதி தூங்கியபடி
ரேடியோவின் குரல்களைத் தின்றபடி
எதையோ வெறுமனே சுத்தப்படுத்தியபடி
ஒரு சிகரெட்டைப் புகைத்தபடி
அறிவிப்புப் பலகைகளைத்
திரும்பத் திரும்ப உற்று நோக்கியபடி
கடந்து செல்பவர்களைப் பார்த்தபடி
நேரத்தின் நிழல்களை வெறித்தபடி
சாரதிகள்
காத்திருக்கிறார்கள்
மஹா யுத்தங்களில் தேரோட்டிக் களைத்து
இப்போது இங்கே வந்து
கார் ஷெட்டுகளில்
அலுவலக வாசல்களில்
அழகு நிலையங்களில் களைப்புடன்
உணவகங்களில் மெல்லிய பசியோடு
வணிக வளாகங்களின் பாதாள வெளிகளில்
அசைவற்ற மரத்தடிகளில்
அரங்குகளின் கொந்தளிப்புகளுக்கு வெளியே
பேரமைதிக்குள்
சாரதிகளுக்குப்
புறப்படும் இடமென்று எதுவுமில்லை
போகுமிடமென்றும் எதுவுமில்லை
பயணத்திற்கு அப்பால்
எந்த இடமும்
அவர்களுடையது இல்லை
சாரதிகள்
பயணத்தின்போதும் வெறுமனே
காத்திருக்கிறார்கள்
இன்னொரு
பயணத்திற்காக
அல்லது
இன்னொரு காத்திருத்தலுக்காக
அவர்கள்
நகரவே நகராத ஒரு வாகனத்தை
இடையறாது செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்
நீங்கள் மழையைப் பார்க்கிறீர்கள்
வெயிலைப் பார்க்கிறீர்கள்
பகல்களையும் இரவுகளையும் பார்க்கிறீர்கள்
உங்களோடு தொடர்ந்துவரும்
மரங்களையும் நினைவுகளையும்
பார்த்துக்கொண்டே வருகிறீர்கள்
ஒரு சாரதி
சாலையை மட்டுமே பார்க்கிறான்
மைல்கற்களையும் வளைவுகளையும்
அபாயங்களையும் மட்டுமே பார்க்கிறான்
ஒரு வாகனம்
உயிருள்ளதுதான்
உயிரற்றதும்தான்
ஒரு சாரதி
உயிருள்ளவன்தான்
உயிரற்றவன்தான்
இரண்டையும் ஆள்கின்றன
எந்திர விதிகள்
ஒவ்வொருமுறையும்
நீங்கள் உங்கள் வாகனத்தோடு
ஒரு சாரதியை விட்டு விட்டு
ஏதோ ஒரு கதவின் பின்னே
மறைகிறீர்கள்
அங்கே உங்களுக்கு
ஒரு வேலை இருக்கிறது
ஒரு வாழ்க்கை இருக்கிறது
ஒரு உலகம் இருக்கிறது
சாரதி
உலகத்திற்கு வெளியே வாழ்கிறான்
தன் மொத்த உடலையும்
உலகத்தை நோக்கி செலுத்தியபடி
உலகத்தின் வாசலில் காத்திருக்கிறான்
நீங்கள் வேறு யாரையும்
அவ்வளவு சார்ந்து இருந்ததில்லை
நீங்கள் வேறு யாருக்கும்
உங்களை அவ்வளவு
ஒப்புக் கொடுத்ததில்லை
ஒரு சாரதி
உங்களை வழிநடத்துகிறான்
கடவுள்கள் இல்லாத உலகில்
ஒரு சாரதி மட்டுமே
உங்களை மோட்சத்திற்கும்
நரகத்திற்கும் இட்டுச் செல்கிறான்
அதுதான்
பரஸ்பரம் ஒருவரை ஒருவர்
அவ்வளவு வெறுத்துக் கொள்கிறீர்கள்
பரஸ்பரம்
ஒருவரை ஒருவர்
மரணத்தின் பாதையில்
அழைத்துச் செல்கிறீர்கள்
நன்றி: உயிர்மை, அக்டோபர் 2010
manushyaputhiran@gmail.com
About
- pras
- VADDU KODDAI EAST, Jaffna, Sri Lanka
- We the Maruthanayagam boys, a great gang of youngsters of Vaddukoddai East, dominated the whole Jaffna during late 90's and early 2000 with our skills in soft-ball cricket. As a group of energetic,creative and skillful kids we started a softball cricket team called WINBIRDS 0n 1995. We started practicing cricket in a small empty space, which belongs to one of our friends, which is called Maruthanayagam stadium.(the story behind this name will be posted later) We were the top soft ball team in the Chankanai division and one among the top four in Jaffna district until we dissolved our team due to the unwanted situations in Jaffna during 2006/07. Now we are settled indifferent jobs in different places. Even though we are living different lives allover the world we all are still MARUTHANAYAGAM BOYZ. ONE FOR ALL! ALL FOR ONE!
No comments:
Post a Comment