About

VADDU KODDAI EAST, Jaffna, Sri Lanka
We the Maruthanayagam boys, a great gang of youngsters of Vaddukoddai East, dominated the whole Jaffna during late 90's and early 2000 with our skills in soft-ball cricket. As a group of energetic,creative and skillful kids we started a softball cricket team called WINBIRDS 0n 1995. We started practicing cricket in a small empty space, which belongs to one of our friends, which is called Maruthanayagam stadium.(the story behind this name will be posted later) We were the top soft ball team in the Chankanai division and one among the top four in Jaffna district until we dissolved our team due to the unwanted situations in Jaffna during 2006/07. Now we are settled indifferent jobs in different places. Even though we are living different lives allover the world we all are still MARUTHANAYAGAM BOYZ. ONE FOR ALL! ALL FOR ONE!

Friday, August 13, 2010

தமிழ் சினிமாவில் கலை: வணிகப் படங்கள் - கலைப் படங்கள்

நீங்கள் விளம்பரப் படங்களை ரசித்துப் பார்ப்பதுண்டா?

பெரும்பாலானோரின் பதில் ‘ஆம்’ என்பதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். என்னளவில், பல வருடங்களுக்கு முன் வந்த, காதலன் கிரிக்கெட் மட்டை பிடித்து சதம் அடிக்க, கட்டுப்பாடுகளை மீறி காதலி நடு மைதானத்தில் நடனமிடும் காட்பரி டைரி மில்க் விளம்பரமும், எங்கு சென்றாலும் தொடரும் ஹட்ச் நாய்க்குட்டியும், ப்பபரப்பப் பாபபா என்று இசைக்கும் ந்நெஸ்கேஃபே… விளம்பரமும், ஏ.ஆர்.ரகுமான் தோன்றும் ஏர்டெல் இசையும், கொண்டாட்டமாக நினைவில் நிற்பவை. சமீபத்தில் நைக் நிறுவனத்திற்காக செய்யப்பட்ட சில வேடிக்கையான விளம்பரங்கள் நடைபாதை கடையொன்றில் குறுந்தகடுகளாகக் கிடைக்க, பேரம் பேசாமல் வாங்கி வந்து போட்டுப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன்.



அதே சமயம், எத்தனை தான் அற்புதமான விளம்பரம் என்றாலும் அவற்றைக் கலை அளவீடுகளோடு குழப்பிக் கொள்வதென்பது எனக்கு ஒருபோதும் நேர்ந்ததில்லை.

விளம்பரத்துறையின் பெரும் நிபுணர்களுள் ஒருவராக எந்த தேசத்தவராலும் மதிக்கப் படும் டேவிட் ஆகில்வி, தன் புத்தகத்தில் "வாடிக்கையாளன் விளம்பரம் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்கிறது என்று வியந்தோதுவதை விட அந்த விளம்பரத்தின் மூலம் அவன் அந்தப் பொருளை வாங்கினானா என்பதே முக்கியமானது, அதற்கேற்ப விளம்பரம் பின் நகர்ந்து கொண்டு விற்பனைப் பொருளை முன் நிறுத்துவதே அவசியம்" என்கிறார். காரணம், விளம்பரங்கள் முழுக்க முழுக்க வணிக நோக்குடன் சமைக்கப் படுபவை. விற்பனைதாரரை, வாங்குவோருடன் தொடர்புபடுத்துவதே அவற்றின் பணி; எவ்வளவு தான் ரசிக்கக் கூடியதாக இருந்தாலும் வணிகத்துக்கு மேலான நோக்கு அவற்றில் இருக்க வழியில்லை. ஆகவே, விளம்பரப் படங்களை வணிகப் படங்கள் என்று குறிப்பதே பொருத்தமானது. அதனாலேயே தொலைக்காட்சியில் தோன்றும் விளம்பர இடைவேளையை ‘கமர்ஷியல்’ ப்ரேக் என்ற சொல்லால் சுட்டுகிறோம்.

விசித்திரம் என்னவென்றால், விளம்பரங்களுக்குப் பயன்படுத்த வேண்டிய சொல்லை பலர் சினிமாவுக்குப் பயன்படுத்த, கேட்க நேரிடுகிறது. நண்பர்களுடனான பல உரையாடல்களில் கவனித்திருக்கிறேன், ‘கமர்ஷியல் படம் தான் ஆனா நல்லா இருந்துச்சு’, ‘ஒரு நல்ல கமர்ஷியல் படம் எடுக்கணும்பா’, ‘அவர் ஒரு கமர்ஷியல் டைரக்டர்’, வணிகப் படம் என்றாலும் கலையின் கூறுகள் அங்கங்கே தென்படுகின்றன – இப்படி, பல்வேறு சேர்க்கையில் ‘கமர்ஷியல்’ என்ற வார்த்தை சினிமாவுடன் இணைத்துப் பயன்படுத்தப்படுவதை எதிர்கொள்ள நேரிடுகிறது.



முதலில், பிரபலமடைந்து பண வசூலை அள்ளிக் குவித்த படங்களை வணிகப் படங்கள் என்று குறிக்கப்படுகிறது என்று மேலோட்டமாகப் புரிதல் கொண்டிருந்தேன். போகப் போக ஆழ்ந்து கவனித்ததில் இந்த வார்த்தை ஏற்படுத்தும் பிரிவினையால் வணிகப் படங்கள், கலைப் படங்கள் என்று இரு வேறு வகையாக சினிமா தமிழில் பிளவுண்டு அதற்குத் தகுந்தபடியான சூத்திரங்கள் உருவாக்கம் கொள்வதை அறிய முடிகிறது. ‘மிகவும் பிடித்த சினிமா’, ‘குறைவாகப் பிடித்த சினிமா’, ‘பிடிக்கவே பிடிக்காத சினிமா’ - இப்படி மட்டுமே சினிமாவைப் பிரித்தறிய முடிந்த என் போன்ற எளிமையான பார்வையாளனுக்கு இதுபோன்ற பகுப்புகள் ஆச்சரியமும் திகிலும் ஊட்டுவதாகவே இருக்கின்றன; சினிமாவை வேறெதுவோவாக ஆக்கும் குழப்பத்தை தருவிக்கின்றன.

சினிமா என்பது முழுக்க முழுக்க கலை சார்ந்த ஊடகம் – இப்படிச் சொல்வதற்கு முன் கலை என்றால் என்ன என்ற கேள்வியைச் சந்திக்க நேரிடுகிறது.

கலை என்றால் என்ன?

குரங்கிலிருந்து மனிதன் என்கிறது விஞ்ஞானம். குரங்கு மனிதனாகிய பாதையில் இரு உயிரினங்களுக்கிடையே முளைத்த பிரிவினைக்கோடு எது? – மனது என்று அறிகிறோம். மனது என்றால் என்ன? காலம் என்று பதில் கொள்ளலாம். அதாவது உலகைப் பகிர்ந்து கொள்ளும் கோடானு கோடி உயிரினங்களில் ஒரு ஜீவராசி மட்டும் நிகழ்வை இறந்த காலம்-நிகழ் காலம்-எதிர் காலம் என்று மூன்று காலங்களாகப் பிரித்துக் கொள்ளத் துவங்கிய போது ‘மனிதன்’ தோன்றத் துவங்கினான். அதாவது மனது என்ற ஒன்று இருப்பதே மற்ற உயிரனங்களுக்கும் மனிதனுக்குமான வித்தியாசம். வேறு வார்த்தைகளில், நேற்று நடந்ததை இன்றைக்கு இழுத்து வந்து பொருத்திப் பார்த்து நாளை அது எப்படி இருக்கும் என்று யூகம் கொள்ள முயல்வதால் நாம் அனைவரும் மனிதர்கள்.

இதில், மனது என்ற ஒன்று இயக்கம் கொள்ளத் துவங்கிய ஆரம்பப் புள்ளியிலேயே அதன் வெளிப்பாட்டு முறைகளும் அவற்றினை செறிவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமும் தோன்றிவிட்டது. விளைவாக சிந்தனை முறைகள் பிறந்தன. தத்துவமும் விஞ்ஞானமும் இருவேறு சிந்தனை முறைகள் ஆயின. சிந்தித்ததை செயல்படுத்த, பரிசீலிக்க, மறுதலிக்க, அதனை அனுபவமாக்கிப் பிறருடன் பகிர்ந்து கொள்ள, அவசியம் ஏற்பட்டது; கலைகள் தோன்றின. தத்துவத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் இடையே கிடந்து அலைந்த மனது தன் வாழ்வனுபவத்தின் தரிசனப் புள்ளிகளை அனுபவமாக சக மனதுக்குக் கடத்த முயல, அத்தகைய செயல்பாட்டிற்கு அது ஒலிகளைப் பயன் படுத்திய போது இசை பிறந்தது. கோடுகளை, வண்ணங்களைப் பயன்படுத்தியபோது அது ஓவியம் பிறந்தது. திடப்பொருளை வடிவமைப்பாக பயன் படுத்திய போது சிற்பம் பிறந்தது, மொழியைப் பயன்படுத்திய போது இலக்கியம் பிறந்தது, உடல் அசைவுகளை பயன்படுத்திய போது நடனம் பிறந்தது. ஒளியைப் பயன்படுத்தி அதை சேகரிக்கக் கற்ற போது புகைப்படக் கலை பிறந்தது, ஒளி, ஒலி ஆகியவற்றின் இணைப்பாக இவை அனைத்தையும் ஒருங்கினைக்கும் சாதனம் சாத்தியமென்ற நிலையில் சினிமா பிறந்தது.

சுருங்கச் சொன்னால், தான் கொண்ட மனதின் நுண்ணுணர்வு மூலம் பொதுவான மனித உணர்வுகளை ஆராய்ந்து அவற்றில் உயரங்களைத் தீண்டி, புதுப் புது திறப்புகளை உருவாக்கி, அதைப் பிறருக்கு அனுபவமாக மாற்றி விடும் திறன் கொண்டவனை நாம் கலைஞன் என்கிறோம். அத்தகைய திறன் வாய்ந்தவனின் செய்நேர்த்தியால் உருவாகும் படைப்பே கலை என்று அறியப்படுகிறது.



இதில், எல்லா உணர்வுகளையும் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள பரிமாறிக் கொள்ள முடியுமா? ஒத்த அலைவரிசை இருந்தால் தானே பரிமாற்றம் சாத்தியம். ஒரு வீட்டின் கூடத்தில் 20 பேருக்கு மத்தியில் நாம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது நாம் நம் மனதின் ஆழங்களைத் திறந்து பேசி விடுவதில்லை, அனைவருக்கும் பொதுவான ஆர்வங்களையே பேசுகிறோம், பின் நாம் நமக்கு நெருக்கமானவராக கருதும் ஒரிருவருடன் தனிமை கொள்ளும்போதே ஆழமாக பேச முடிகிறது. இந்த இரு முறைகளே கலையிலும் சாத்தியமாகிறது. வெகு மக்களுக்குப் பொதுவாக இருக்கும் அம்சங்களை அவர்களின் ஆர்வத்திற்கேற்ப படைப்பைக் கொடுப்பவன் வெகு மக்களின் கலைஞனாகிப் பிரபலமடைகிறான். அதை தவிர்த்து தன் நுண்ணுணர்வின் முழுவீச்சில் நின்று, தன் அலைவரிசையை உள்வாங்கும் திறனுடனான மனங்களோடு மட்டும் உரையாடும் படைப்புகளை உருவாக்குபவன் பிரபலம் குறைந்த தீவிர கலைஞானகிறான்; ஆழமான அனுபவப் புள்ளிகளை முன்வைக்கும் அவனது கலை, மனித மனதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தேவையான காரணிகளை கொண்டிருப்பதால் தீவிரக் கலைஞன் முக்கியமான மனிதனாகிறான். உதாரணத்திற்கு, இன்றைய உலக அரங்கில் ஹாலிவுட்டின் ஸ்டீவன் ஸ்பீல்பர்கை வெகு மக்கள் கலைஞன் என்றும், ஈரானின் அபாஸ் கைரோஸ்டமியைத் தீவிரக் கலைஞன் என்றும் கொள்ளலாம். (குறிப்பு: இது உதாரணத்துக்காகச் சொல்லப்படுகிறதே தவிர ஸ்பீல் பர்க் எடுத்த ‘ஷின்ட்லர்ஸ் லிஸ்ட்,‘ ஆர்டிஃபீஷியல் இன்டெலிஜன்ஸ், எக்ஸ்ட்ரா டெரஸ்டிரியல் போன்ற படங்கள் வேறு தளத்தில் வைத்து மதிப்பிடப்பட வேண்டியவை என்ற கவனம் எனக்கு உண்டு என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறேன்).

கலையின் பாகுபாடுகள் இப்படியானதாக, பார்வையாளன்- படைப்பாளி இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் தேர்ந்து கொள்ளும் முறை சார்ந்து வீரியத் தன்மையுடன் அமைகிறதே தவிர, இதில் எங்கும் வணிகம் சார்ந்த கலை, வணிகம் சாராத கலை என்ற பிரிவினை இருப்பதாகத் தெரியவில்லை. தவிர, குறிப்பாக சினிமாவில், இரண்டில் எந்த வகைக் கலைஞன் என்றாலும் அவன் ஜீவித்திருக்க பொருளாதாரம் அவசியமானதே. அபாஸ் கைரோஸ்டமி எடுக்கும் படங்கள் உலகின் பல நுண்ணுணர்வு மிக்க மனங்களால் பார்க்கப்பட்டு விவாதிக்கப்படுவதாலே அவரால் தொடர்ந்து தன் படைப்புகளை உருவாக்கி திரையிட முடிகிறது.

தமிழ் சினிமாவில், துரதிர்ஷ்ட வசமாக, அனைவரின் அறிவுக்கும் எட்டும் பொது தன்மைகள் கொண்ட சிறப்பான கலை தோற்றம் கொள்ளாமலே போய் விட்டது; இங்கே ஸ்டீஃபன் ஸ்பீல் பர்க் போன்ற, அல்ஃப்ரட் ஹிட்ச் காக் போன்ற, அனைவருக்கும் சுவாரஸ்யமான ஒரு இயக்குனர் தோன்றவேயில்லை. அதற்குப் பதிலீடாக அனைவருக்கும் புரியக்கூடியது கேளிக்கை அம்சங்கள் மட்டுமே என்பதாகக் கொள்ளப் பட்டுவிட்டது. இந்த நிலையை இப்படிச் செய்ததில் பொது பார்வையாளனின் அரைவேக்காட்டுத்தனங்களும் தமிழ் இயக்குனர்கள் பார்வையாளனைப் பற்றியும் ஊடகத்தைப் பற்றியும் சரிவர புரிந்து கொள்ளாத தன்மையும் சம பங்கு வகிப்பதாகவே தோன்றுகிறது. இதனாலேயே, ‘வணிகப் படம்’ போன்ற அர்த்தமில்லாத வார்த்தைகள் உருக்கொள்கின்றன என்று நினைக்கிறேன். இதனால் விளைவது என, வணிக சினிமா என்பது வெறும் வார்த்தைப் பிரயோகமாக மட்டுமாக மட்டுமல்லாமல், அது ஒரு தனி வகையாகப் புரிந்துக் கொள்ளப்பட்டு அதற்கான சூத்திரங்களும் - என்னவென்று புரியாத நிலையிலேயே செல்லுபடி ஆகுமா இல்லையா என்ற உத்தரவாதம் கூட இல்லாமல் - உருவாக்கம் கொள்ளத் துவங்கிவிட்டன.

சில வருடங்களுக்கு முன் சினிமாக்காரராகும் முயற்சியிலிருந்த நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. பேச்சுக்கிடையில் நண்பர், "எனக்கு ஆர்ட் ஃபிலிம்ல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லீங்க, கமர்ஷியல் படம் எடுக்கனணும்" என்றார். நான், "இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?என்று கேட்டேன்.

சற்று யோசித்தவர், "ஒருத்தன் முதலில் சைக்கிளில் போறான், சைக்கிள் பஞ்சராயிடுது, பஞ்சரான சைக்கிளைத் தள்ளிக்கிட்டுப் போறான், அப்புடியே ஸ்லோவா படம் நகருது, இப்புடியெல்லாம் போட்டு மனுஷன அறுத்தெடுத்தா அது ஆர்ட் ஃபிலிம். இதுக்கு பதிலா ஸ்பீடா விடு விடுனு நகர்ந்தா அது கமர்ஷியல் படம்". என்றார். மொத்தத்தில் கலைப்படம் என்றால் மெதுவாக நகர்வது, வணிகப் படம் என்றால் வேகமாக நகர்வது என்பது அவர் கொண்டிருந்த புரிதல்.

நான் அவரிடம், "நீங்கள் சொன்ன உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம், ஒருவன் சைக்கிளில் போகிறான். சைக்கிள் பஞ்சராகி விடுகிறது. தள்ளிக் கொண்டு போகிறான், ஆனால், அந்தக் காட்சிக்கு முன்னதாக அவனது காதலி அவனுக்காகப் பேருந்து நிலயத்தில் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று காட்டப்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது படம் வேகமாக நகர்வதாக உணர்வீர்களா அல்லது மெதுவாக நகர்கிறது என்று நினைப்பீர்களா?" என்றேன்.

மெளனம்.

நான் தொடர்ந்து, "சரி, இன்னும் ஒரு படி மேலே சென்று இதே காட்சியை யோசித்துப் பார்ப்போம். அவனது காதலி அவனை நம்பி வீட்டை உதறிக் கிளம்பிச் செல்ல தயாராய் பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறாள், இருவரது குடும்பச் சூழலும் மோசமாக காதலுக்கு எதிரான நிலையிலிருக்கிறது. இருவீட்டாரும் அவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.அந்த நிலையில் நண்பனிடம் பணம் புரட்டச் சென்றவனுடைய சைக்கிள் பஞ்சராகி, அவன் விரைவு கொள்ள முடியாமல் போகிறதென்றால், படம் வேகமாக நகருமா? மெதுவாக நகருமா?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டேன்.

நண்பரிடம் பதில் இல்லை.

இப்படி ஏராளமான இளைஞர்கள், சினிமா பற்றிய குறைவுபட்ட புரிதல்களோடு, வணிகப் படம் என்று எதையோ எண்ணிக்கொண்டு, அதையே தங்கள் வாழ்க்கையின் இறுதி லட்சியமாக்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் அலைந்து அலைக்கழிகிறார்கள். வெற்றியாளர்களாக அறியப்படும் பல இயக்குனர்களுமே இதுபோன்ற புரிதல்களுடன் இயங்குவதும் அறியமுடிகிறது. இவர்களின் மொத்த புரிதலுமே வணிகப் படம் என்றால் பேர், புகழ், பெண்கள்(!) என்பதாகவும், கலைப்படம் என்றால் பார்வையாளனை அறுத்தெடுத்துக் கொன்று போட்டு விட்டு, விருது (விருது என்பது தமிழ்நாட்டில் அவ்வளவு மலிவானது அதுவே ‘ஆஸ்கர்’ என்றால் ஒஸ்தி!) வாங்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, தெருவில் உதவாக்கரையாகத் திரிவது, என்பதாக இருக்கிறது.

வணிகப் படம், கலைப் படம் என்ற பிரிவினை இப்படி என்றால், இதன் நீட்சியாக ‘மிடில் சினிமா’ என்றொரு புது வார்த்தையையும் உருவாக்கி சமீப காலமாக உருவாக்கிப் புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள். இந்த என்ற சொல்லின் அடிப்படியில் இன்னும் எத்தனை சூத்திரங்கள் உருவாகி, அதை நம்பி எத்தனை பேர் புறப்படக் காத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

இப்படி ஏதேதோ பெயரிட்டு தங்களுக்கான சினிமாவினைத் தேர்வு செய்பவர்களுக்கு ஒரு கேள்வி: சில வருடங்களுக்கு முன் ‘டைட்டானிக்’ என்றொரு படம் வெளிவந்து மொழி, இன, கலாச்சார எல்லைகளைத் தாண்டி உலக மக்கள் அனைவராலும் பார்க்கப் பட்டு கொண்டாடப்பட்டது. 11 ஆஸ்கர் விருதுகள் பெற்றது. சமீபத்தில் அதே இயக்குனர் இயக்கிய ‘அவதார்’ என்ற படம் பட்டித தொட்டிகளிலெல்லாம் ஓடிப் பொருள் ஈட்டியது. ‘டைட்டானிக்’, ‘அவதார்’, இவையெல்லாம் வணிகப் படங்களா? கலைப் படங்களா?

உங்கள் பதில் எதுவாக இருப்பினும் எந்த நிலை, எந்தச் சூழலை, எந்த காரணங்களால் எப்படிச் செய்தாலும், இறுதியில் கலையானது தன் இல்லாமை நிலையில் கூட தன் பாதிப்பை (எதிர்மறையாகவாவது) நிகழ்த்தியே தீரும். எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு சமூகத்தின் மக்கள் கலை உணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த சமூகம் மேம்படும் வாய்ப்பு ஏற்படுகிறது, மோசமான கலை ரசனை மோசமான சமூக அமைப்பிற்கே வழிவகுக்கும். இதற்கு மாற்று என்று ஒன்றிருக்க வழியில்லை. ஆதிப் புள்ளி முதல் சிந்தனையை கலை வழி மட்டுமே மீட்டி, அனுபவமாக்கி, சேகரித்து வந்துள்ள மனித மனதால் சட்டென்று ஒரு கலை சார்ந்த ஊடகத்தைக் கேளிக்கைக்குரிய சாதனம் என்று சொல்லித் துண்டித்துக் கொண்டுவிட முடியாது. இதற்கு, சினிமாவுக்கு எந்த ஒரு கலை மதிப்பையும் கொடுக்கத் தயாராக இல்லாத தேசத்தில் சினிமா சம்பந்தப்பட்டவர்களே ஆட்சியாளர்களாகிவரும், கிரிக்கெட் உட்பட சினிமாயின்றி எந்தத் துறையும் இயக்கம் கொள்ள முடியாமல் நீர்த்துப் போய் நிற்கும். நம் சமூகத்தின் இன்றைய நிலையே சாட்சி.

பொதுவானதொரு பார்வையாளன் சினிமா பார்ப்பது என்று முடிவு செய்து நேரத்தினை அதற்கு செலவிடத் துவங்கிவிட்டால், பின் அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவன் ரசிக்கும் விதத்திற்கு ஏற்றபடி அதன் பாதிப்பு அவன் மனதில் இருந்தே தீரும். காரணம், என்ன பெயரிட்டு நாம் அழைத்தாலும், ஒரு சில நொடிகள் ரசித்துப் பார்த்துவிட்டு விலகிக் கொள்ள சினிமா என்ற ஊடகம் எந்த நிலையிலும் முழுக்க முழுக்க வணிகம் சார்ந்த விளம்பரப் படம்
அல்ல.

ஆனந்த் அண்ணாமலை

No comments:

Post a Comment

name