About

VADDU KODDAI EAST, Jaffna, Sri Lanka
We the Maruthanayagam boys, a great gang of youngsters of Vaddukoddai East, dominated the whole Jaffna during late 90's and early 2000 with our skills in soft-ball cricket. As a group of energetic,creative and skillful kids we started a softball cricket team called WINBIRDS 0n 1995. We started practicing cricket in a small empty space, which belongs to one of our friends, which is called Maruthanayagam stadium.(the story behind this name will be posted later) We were the top soft ball team in the Chankanai division and one among the top four in Jaffna district until we dissolved our team due to the unwanted situations in Jaffna during 2006/07. Now we are settled indifferent jobs in different places. Even though we are living different lives allover the world we all are still MARUTHANAYAGAM BOYZ. ONE FOR ALL! ALL FOR ONE!

Blog Archive

Saturday, October 23, 2010

மனுஷ்ய புத்திரன் கவிதைகள்

மன்னிப்பு என்பது



மன்னிப்பு கேட்கும்படி

அப்புவுக்கு நான் கற்பித்த நாளில்

மன்னிப்பு என்றால்

என்னவென்று கேட்கிறான்



ஒரு குழந்தைக்குப்

புரியவைக்க முடியுமா



மன்னிப்பு என்பது

ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும்

அதிகபட்ச தண்டனையென்று



அது வலிமையுள்ளவர்கள்

வலிமையற்றவர்கள்மேல் செலுத்தும்

அதிகாரம் என்று



வலிமையற்றவர்கள்

தமது இயலாமைக்குத்

தாமே வழங்கிக் கொள்ளும்

சமாதானமென்று



கடவுள்களின் ஓய்வு நேரப்

பொழுது போக்கு என்று



பந்தயத்தில் தோற்ற குதிரையை

உயிரோடுவிடுவது என்று



மரண தண்டனைக் குற்றவாளிக்குத்

தூக்கு மேடையில் வழங்கப்படும்

கருணை என்று



ஒரு முடிவற்ற துன்பத்திற்கு

நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்வது என்று



எளிய தேவைகளுக்காக செய்துகொள்ளும்

சமூக உடன்படிக்கை என்று



கன்னத்தில் அறைந்தவர்களுக்கு

மறுகன்னத்தைக் காட்டுவது என்று



படுக்கையறையில்

மண்டியிடுதல் என்று



ஒரு இந்தியன் கண்டுபிடித்த

வினோத தத்துவம் என்று



பிரார்த்தனைகளின்

மையப் பொருள் என்று



ஒரு புரட்சியாளனால்

உதாசீனப்படுத்தப்படுவது என்று



இன்னொரு சந்தர்ப்பம்

அளிக்கும் முயற்சி என்று



இன்னொரு பக்கத்தைப்

புரிந்துகொள்வது என்று



தண்டனையை

ஒத்தி வைப்பது என்று



நண்பர்களுக்குத் தரும்

சிறந்த பரிசு என்று



ஒரு துரோகத்தை

அறியாததுபோல் நடிப்பது என்று



எந்தத் தவறும் செய்யாத போதும்கூட

கேட்கப்படுவது என்று



பெரும்பாலான சமயங்களில்

மறுக்கப்படுவது என்று



ஒருவரை அச்சத்திலிருந்து

விடுவிப்பது என்று



ஒருவரை நிரந்தரமாக

அடிமைப்படுத்துவது என்று



மறதியின்

இன்னொரு பெயர் என்று



அடிக்கடி பயன்படுத்தப்படும்

ஒரு அர்த்தமற்ற சொல் என்று



மிகவும் எளிய

ஒரு தந்திரமென்று



ஒரு போதைப்பொருள்

என்று



மன்னிக்கவே முடியாத ஒன்றை

மன்னிப்பது போல் பாவனை செய்வது என்று



ஒரு குழந்தைக்குப்

புரியவைக்க முடியுமா



மன்னிப்பு என்பது

இறுதியில்

ஒரு கண்ணீர்த்துளி

மட்டுமே என்று



=



வியூகத்திற்குள் இருக்கும்போது



வியூகத்திற்குள்

நீங்கள் இருக்கும்போது

நாம் ஆயுதபாணியா

நிராயுதபாணியா என்று

எப்போதும் யோசிக்கிறீர்கள்



உங்கள் ஆயுதங்களை

நீங்கள் பயன்படுத்தக்

கற்றுக் கொள்வதற்குள்

யுத்தம் முடிவுக்கு வந்துவிடலாம்



சரணடைவதா

எதிர்த்துப் போரிடுவதா

என்று ஏன் உடனடியாக

முடிவெடுக்க விரும்புகிறீர்கள்



யுத்தத்தில்

நீங்களாக எடுக்கும்

எந்த முடிவும்

உங்களது கற்பனைகள் மட்டுமே



வியூகத்திற்குள் இருக்கும்போது

எதிரியின் பலம் குறித்தும்

பலவீனம் குறித்தும்

ஏன் இவ்வளவு சிந்திக்கிறீர்கள்



எதிரியும்

தன்னைப் பற்றி

அவ்வளவு குழப்பங்களுடன்தான்

சிந்தித்துக்கொண்டிருக்கிறான்



உடைத்துத் திறக்கக்கூடிய

ஒரே ஒரு அரணைப் பற்றி

உங்கள் வரைபடத்தில்

துல்லியமாகக் குறிக்கிறீர்கள்



அதுதான் உங்களுக்கு

விரிக்கப்பட்ட

மரண வலையாகவும் இருக்கலாம்

இல்லையா?



வியூகத்திற்குள் இருக்கும்போது

நான் முதலில்

சிந்திப்பதை நிறுத்தி விடுகிறேன்



சிந்திப்பதை நிறுத்தும்போது

நாம் பயப்படுவதும்

நின்று விடுகிறது



அப்போது நான்

ஒரு பியர் பாட்டிலையோ

ஒரு புத்தகத்தையோ

திறக்கிறேன்.



அவை நமக்கு முதலில்

மறதியைக் கொண்டு வருகின்றன

பிறகு

அதன் வழியே விடுதலையை



வியூகத்தில் இருக்கும்போது

நான் புதிதாக ஒரு பெண்ணைக்

காதலிக்கத் தொடங்குகிறேன்



அது நம்மைப்

புதிதாக வேறொரு வியூகத்திற்குள்

செலுத்தி விடுகிறது



வியூகத்தில் இருக்கும்போது

தியானம் செய்வதோ

இயற்கை உணவுகளை சாப்பிடுவதோ

’ஜிம்’மிற்கு செல்வதோ

மிகவும் நல்லது



நாம் ஏதாவது ஒன்றைத்

தீவிரமாகப் பின்பற்றாவிட்டால்

வியூகத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிடும்



வியூகத்திற்குள் இருக்கும்போது

புதிதாக நீங்கள்

ஒரு செல்போனையோ

காரையோ வாங்குவது சிறந்தது



வியூகத்தின்போது

நம்மிடம் இருந்து பறிக்கப்படுபவை

எதுவென்று நமக்குத் தெரியாது



வியூகத்தில் நீங்கள்

அபிமன்யுவைப்போல

திகைத்துப் போய்விடுகிறீர்கள்



கிறிஸ்துவைப்போல

அமைதியாக ரத்தம் சிந்துங்கள்

சிலுவையில் தொங்கியபடி

எதிரியின் பாவங்களை மன்னியுங்கள்

வேறெப்படியும்

வியூகத்திலிருந்து

வெளியேற முடியாது



வியூகத்தில்

எதிர்த்துப் போரிட

நீங்கள் ஒரு சத்ரியனோ

போராளியோ அல்ல



நீங்கள் வெறுமனே

இந்தக் கவிதையைப்

படிப்பவர்

அல்லது

எழுதுபவர்தானே



=



யாரோ கவனிக்கும்போது



யாரோ கவனிக்கிறார்கள்

என்று தெரிந்ததும்

காதலர்கள் அந்த இடத்திலிருந்து

நகர்கிறார்கள்



ஒரு இளம் பெண் தனது உடலில்

குறுகுறுப்பை உணர்கிறாள்



பேருந்தில் ஒருவன்

செல்போனை அணைத்துவிடுகிறான்



இரண்டு பேர் மிகவும் தாழ்ந்த குரலில்

சண்டையிடத் தொடங்குகிறார்கள்



குழதைகளின் இயல்பு

திடீரென மாறி விடுகிறது



அழகற்ற ஒருத்தி

மனம் உடைந்து அழுகிறாள்



ஒரு சிறு பையன்

சிகரெட்டைக் கீழே போட்டுத் தேய்க்கிறான்



மனப்பிறழ்வு கொண்ட ஒருத்தி

எல்லா சாவித்துவாரங்களையும் அடைக்கிறாள்



இளைஞர்கள் மிகவும் உயரமான

இடத்திலிருந்து குதிக்கிறார்கள்



ஒரு மூதாட்டி மீண்டும்

அதே கதையைச் சொல்லத் தொடங்குகிறாள்



பூச்சாடியில் மலர்கள்

சரி செய்யப்படுகின்றன



கலைந்த முகங்கள்

நேர்த்தியாக்கப்படுகின்றன



பத்திரிகையில் ஒரு திருத்தம்

வெளியிடப்படுகிறது



மருந்துக்கடையில் ஒருத்தி

எதையோ வாங்க மிகவும் நாணமடைகிறாள்



அரவமற்ற சாலையில்

ஒருவன் வேகமாக நடக்கத் தொடங்குகிறான்



குடிபோதையில் நிராதரவாய் கிடந்த யாரோ

முனகத் தொடங்குகிறான்



மதிய வெயிலில் தியானித்த காகம்

சட்டென எழுந்து பறக்கிறது



ரயிலில் குருட்டுப் பிச்சைக்காரி

இன்னும் உருக்கமாகப் பாடுகிறாள்



யாரோ பாதிப் புணர்ச்சியில்

திடுக்கிட்டு எழுந்துகொள்கிறார்கள்



ஒரு கொலைகாரன்

தன்கத்தியை மறைத்து வைக்கிறான்



கோமாளிகள் இன்னும் சிரிக்கவைக்கப்

போராடுகிறார்கள்



சொற்பொழிவாளன் மேலும்

குரலை உயர்த்துகிறான்



ஒரு தவம்

கலைகிறது



குடியரசு தின அணிவகுப்பில்

நாட்டின் தலைவர் கொட்டாவியை

அடக்கிக்கொள்கிறார்



ஒரு வேசி

மெலிதாகப் புன்னகைக்கிறாள்



ஏழ்மையை மறைக்க

ஒருவன் வீணே பொய் சொல்கிறான்



மைதானத்தில் அவசர அவசரமாக

ரத்தக்கறைகள் கழுவப்படுகின்றன



கடையில் அவ்வளவு மெலிதான

ஆடையை ஒருத்தி தேர்ந்தெடுக்கிறாள்



சிலர் பணத்தைப்

பத்திரப்படுத்துகிறார்கள்



சரித்திரத்தில் இடம்பெறுவதற்கான

தீவிரத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன



முற்றாக நம்பிக்கையிழந்தவர்கள்

ஏதேனும் உதவி கிடைக்கலாம்

என்று மீண்டும் நம்பத் தொடங்குகிறார்கள்



யாரோ கவனிக்கிறார்கள்

என்று தெரிந்ததும்

எல்லோருமே

தங்கள் சுதந்திரத்தைக்

கொஞ்சம் இழக்கிறார்கள்



=



நினைவூட்டல்களின் காலம்



உனக்கு இதை

நினைவூட்டுதல்

கொஞ்சம் வருத்தமானது



ஒருவருக்கும்

திரும்பிப் பார்க்க

ஒன்றுமில்லாத

ஒரு காலத்தில்



உனக்கு இதை

நினைவூட்டுதல்

கொஞ்சம் அவமானகரமானது



கொடுத்ததைப்

பெற்றுக்கொண்டதை



அர்ப்பணித்துக்கொண்டதை

இழந்து வந்ததை



கண்துஞ்சாமல் இருந்ததை

கணக்குகள் பார்க்காதிருந்ததை



சிதறியதைக் கோர்த்துத் தந்ததை

உடைந்தவற்றை ஒட்டியதை



*



உனக்கு நினைவூட்டினால்தான்

நீ நினைத்துப் பார்ப்பாயா?



எல்லாவற்றையும் மாற்ற முடியும்

என்ற அப்போதைய நம்பிக்கைகளை



உண்மையாகவே கொஞ்சம் மாற்றியபோது

அடைந்த உவகைகளை



சாய்ந்துகொள்ளக் கிடைத்த தோள்களே

போதுமாக இருந்த நம் பயணங்களை



ஒரு பிடிமானமும் அற்று வீழ்ந்தபோது

அந்தரத்தில் தாங்கிய கைகளை



*



உனக்கு நினைவூட்டினால்தான்

இப்போது கொஞ்சம் கருணை காட்டுவாயா?



இதைவிடவும் பெரிய கஷ்டங்களைத்

தாங்க முடிந்ததை



இதைவிடவும் பெரிய தவறுகளை

மன்னிக்க முடிந்ததை



பெரியதாகத் தோன்றிய

நமது சிறிய காதல்களை



அப்போது சிறியதாகத் தோன்றிய

நம் பெரிய வாதைகளை



*



உனக்கு நினைவூட்டமுடியாவிட்டால்

நானும் அதை மறந்து போகவேண்டுமா?



இனி திரும்பப் பெற முடியாத

ஒரு காலத்தை



இனி மீட்கமுடியாத

ஒரு பருவத்தை



இனி கண்டுபிடிக்கமுடியாத

நம் அதிர்ஷ்டங்களை



இனி நிரூபிக்கமுடியாத

சில நியாயங்களை



உனக்கு இதை

நினைவூட்டுதல்

கொஞ்சம் வருத்தமானது



நினைத்துப் பார்ப்பதன் விலையை

யாரும் செலுத்தத் தயாரில்லாத

ஒரு காலத்தில்

அல்லது

மறதி மிக மிக மலிவாகக் கிடைக்கும்

ஒரு காலத்தில்



உனக்கு இதை

நினைவூட்டுதல்

கொஞ்சம் அவமானகரமானது



=





சாரதிகள்



சாரதிகள்

காத்திருக்கிறார்கள்

எல்லா இடங்களிலும்



வாகனத்தின்

ஒரு கதவைத் திறந்து வைத்தபடி

செய்தித்தாளின் படித்த செய்தியையே

மறுபடி படித்தபடி

பாதி தூங்கியபடி

ரேடியோவின் குரல்களைத் தின்றபடி

எதையோ வெறுமனே சுத்தப்படுத்தியபடி

ஒரு சிகரெட்டைப் புகைத்தபடி

அறிவிப்புப் பலகைகளைத்

திரும்பத் திரும்ப உற்று நோக்கியபடி

கடந்து செல்பவர்களைப் பார்த்தபடி

நேரத்தின் நிழல்களை வெறித்தபடி



சாரதிகள்

காத்திருக்கிறார்கள்

மஹா யுத்தங்களில் தேரோட்டிக் களைத்து

இப்போது இங்கே வந்து

கார் ஷெட்டுகளில்

அலுவலக வாசல்களில்

அழகு நிலையங்களில் களைப்புடன்

உணவகங்களில் மெல்லிய பசியோடு

வணிக வளாகங்களின் பாதாள வெளிகளில்

அசைவற்ற மரத்தடிகளில்

அரங்குகளின் கொந்தளிப்புகளுக்கு வெளியே

பேரமைதிக்குள்



சாரதிகளுக்குப்

புறப்படும் இடமென்று எதுவுமில்லை

போகுமிடமென்றும் எதுவுமில்லை

பயணத்திற்கு அப்பால்

எந்த இடமும்

அவர்களுடையது இல்லை



சாரதிகள்

பயணத்தின்போதும் வெறுமனே

காத்திருக்கிறார்கள்



இன்னொரு

பயணத்திற்காக

அல்லது

இன்னொரு காத்திருத்தலுக்காக



அவர்கள்

நகரவே நகராத ஒரு வாகனத்தை

இடையறாது செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்



நீங்கள் மழையைப் பார்க்கிறீர்கள்

வெயிலைப் பார்க்கிறீர்கள்

பகல்களையும் இரவுகளையும் பார்க்கிறீர்கள்

உங்களோடு தொடர்ந்துவரும்

மரங்களையும் நினைவுகளையும்

பார்த்துக்கொண்டே வருகிறீர்கள்

ஒரு சாரதி

சாலையை மட்டுமே பார்க்கிறான்

மைல்கற்களையும் வளைவுகளையும்

அபாயங்களையும் மட்டுமே பார்க்கிறான்



ஒரு வாகனம்

உயிருள்ளதுதான்

உயிரற்றதும்தான்

ஒரு சாரதி

உயிருள்ளவன்தான்

உயிரற்றவன்தான்

இரண்டையும் ஆள்கின்றன

எந்திர விதிகள்



ஒவ்வொருமுறையும்

நீங்கள் உங்கள் வாகனத்தோடு

ஒரு சாரதியை விட்டு விட்டு

ஏதோ ஒரு கதவின் பின்னே

மறைகிறீர்கள்

அங்கே உங்களுக்கு

ஒரு வேலை இருக்கிறது

ஒரு வாழ்க்கை இருக்கிறது

ஒரு உலகம் இருக்கிறது



சாரதி

உலகத்திற்கு வெளியே வாழ்கிறான்

தன் மொத்த உடலையும்

உலகத்தை நோக்கி செலுத்தியபடி

உலகத்தின் வாசலில் காத்திருக்கிறான்



நீங்கள் வேறு யாரையும்

அவ்வளவு சார்ந்து இருந்ததில்லை

நீங்கள் வேறு யாருக்கும்

உங்களை அவ்வளவு

ஒப்புக் கொடுத்ததில்லை



ஒரு சாரதி

உங்களை வழிநடத்துகிறான்

கடவுள்கள் இல்லாத உலகில்

ஒரு சாரதி மட்டுமே

உங்களை மோட்சத்திற்கும்

நரகத்திற்கும் இட்டுச் செல்கிறான்



அதுதான்

பரஸ்பரம் ஒருவரை ஒருவர்

அவ்வளவு வெறுத்துக் கொள்கிறீர்கள்

பரஸ்பரம்

ஒருவரை ஒருவர்

மரணத்தின் பாதையில்

அழைத்துச் செல்கிறீர்கள்



நன்றி: உயிர்மை, அக்டோபர் 2010

manushyaputhiran@gmail.com

Saturday, August 28, 2010

கவிக்கோ அப்துல் ரகுமான் Collections

கண்ணகியின் கதையைச் சொல்ல தலையணை சைஸில் நூல் தேவைப்பட்டது இளங்கோவடிகளுக்கு. அதன் சாரம்சத்தை ஒரு சில வரிகளிலேயே சொல்லி முடித்து விட்டார் கவிக்கோ அவர்கள்.
“பால் நகையாள்
வெண்முத்துப் பல் நகையாள்
கண்ணகியாள் கால் நகையால்
வாய் நகைபோய்க்
கழுத்து நகை இழந்த கதை “.
அருஞ்சொற்பொருள் :
பால் நகையாள் = பால் உணர்ச்சி தோன்றுகிற மாதிரி சிரிக்காதவள்
வெண்முத்துப் பல் நகையாள் = முத்துப் போன்ற பற்களை உடையவள்
கால் நகையால் = காற் சிலம்பினால்;
வாய் நகை போய் = புன்னகை மறைந்துப்போய்
கழுத்து நகை = மாங்கல்யம் (தாலி)
சிலம்புக் கதையை சொல்ல வந்த கவிக்கோ, நகை என்ற வார்த்தையை வைத்து சொற்சிலம்பம் ஆடியிருப்பது அவரது கவித்திறனைக் காட்டுகிறது
இதைப்போலவே கம்பன் கழகத்தில் நடந்த ஒரு கவியரங்கில் கைகேயிக்காக கவிதை பாடினார் கவிக்கோ.
“கூனி இவளை வளைக்க
வரங்களுக்காக
நாணை இழுத்தாள்.
அது
அவள் மங்கள நாணையே
வாங்கிக்கொண்டது”
இந்த சொல் விளையாட்டு கவிக்கோவிற்கு கைவந்தக் கலை.

கவிக்கோ அப்துல் ரஹ்மானின் collectios

’இறைவா எனக்குப்
புன்னகைகளைக் கொடு’ என்று
பிரார்த்தித்தேன்
அவன் கண்ணீரைத் தந்தான்
‘வரம் கேட்டேன்
சாபம் கொடுத்து விட்டாயே’
என்றேன்
இறைவன் கூறினான்:
‘மழை வெண்டாம்
விளைச்சலை மட்டும் கொடு’ என்று
எந்த உழவனாவது கேட்பானா’
ஆனால் நீ
அப்படித்தான் கேட்கிறாய்
கண்ணிரில் புன்னகையும்
புன்னகையில் கண்ணீரும்
ஒளிந்திருப்பதை
நீ அறிய மாட்டாய்
உண்மையைச் சொல்வதானால்
கண்ணீர் கண்களின் புன்னகை
புன்னகை இதழ்களின் கண்ணீர்’
வைகறைப் பொழுதில் மலர்களின் மீது
பனித்துளிகளை
நீ கண்டதில்லையா?
புன்னகை
தன்னைக் கண்ணீரால்
அலங்கரித்துக் கொள்ளும்
அற்புதம் அல்லவா அது!
மழை மேகங்களில்
மின்னல் உதிப்பதை
நீ பார்த்ததில்லையா?
கண்ணீரில் இருந்து
சிரிப்புப் பிறக்கும்
அழகல்லவா அது?
முத்து என்பது என்ன?
சிப்பிக்குள் இருந்து
தவம் செய்யும் கண்ணீர்த் துளி
புன்னகையாகும் அதிசயம் தானே அது
கன்ணீரில் மலரும்
புன்னகைப் பூக்கள்
வாடுவதில்லை என்பதை
அறிவாயாக!
மேலும்
கண்ணீர்தான்
உன்னைக் காட்டுகிறது
புன்னகையோ
சில நேரங்களில்
உனக்கு திரையாகிவிடுகிறது
‘God, give me smiles,’ I prayed
He gave me tears.
I asked for a boon
And you have cursed me’ – I said
God said:
Your prayers is like that of a farmer
Who wants a good harvest
But not the rains.
You do not know
That there are smiles in tears
And tears in smiles
To tell the truth,
Tears are the smiles of the eyes
And the smile, tears shed by the mouth
Have you not seen the dew drops
On flowers
At dawn?
That is the miracle of a
smile decorating herself with tears!
Have you not seen the lightning flash
Hidden in the clouds?
That is the beauty of the smile
Being born of tears!
And, what my son, is the pearl?
That is the tear-drop
Doing penance inside an oyster
And the mystery of its
Being transformed into a smile
Know that the smile-flowers
Which spring from tears
Neither wilt nor wither
Again it’s the tears
That show who you are!
While the smile
Many times hides the real you!
Thanks to : Varalotti for Translation – Indus Ladies.com
கவிக்கோ அப்துல் ரஹ்மானின்
ஆலாபனை என்ற தொகுதியிலிருந்து

கவிக்கோ அப்துல் ரகுமான் Collectios

1.
‘பித்தன்’ ‘பித்தன்’ என்ற
கூச்சல்களையும்
கற்களையும்
அவன் மீது
எறிந்துகொண்டிருந்தார்கள்.
அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.
அவன் காயங்களும்
சிரித்துக்கொண்டிருந்தன.
அப்படித்தான் அவனை
முதன் முதலாகப் பார்த்தேன்.
நீ பித்தனா? என்று கேட்டேன்.
நீ கல்லா? என்றான்.
நான் காயப்பட்டேன்.
நீ எப்படிப்
பித்தன் ஆனாய்? என்றேன்.
ஒருமுறை தற்செயலாய்
உண்மையைப்
பின் பக்கமாய்ப்
பார்த்துவிட்டேன்.
அப்போது
சகல இரவுகளுக்குமான
சூரியோதயம் நடந்தது.
திரைகள் விலகின.
எதிர்ப்பதங்கள்
கைகோத்து
நடனமாடக்கண்டேன்.
முரண்கள்
முகமூடியைக் கழற்றிவிட்டு
முத்தமிடக் கண்டேன்.
காலமும் இடமும் மறைய
எல்லாம்
ஒன்றாவதைக் கண்டேன்.
உண்டும் இல்லையும்
அர்த்தம் இழந்தன.
அந்தத் தருணத்தில்
அறிவுச் சிறையிலிருந்து
நான் விடுதலை ஆனேன்.
என்றான்.
அவர்கள் ஏன் உன்மீது
கல்லெறிகிறார்கள்? என்றேன்.
நான் அவர்களுடைய
அந்தரங்கத்தின் கண்ணாடி.
அதனால்தான் என்னை
உடைக்கப் பார்க்கிறார்கள் என்றான்.
ஏன்?என்றேன்.
அவர்கள்
வெளிப்படுவதற்கு
பயப்படுகிறார்கள்.
அவர்கள்
வேடங்களில்
வசிக்கிறார்கள்.
அது அவர்களுக்கு
வசதியாக இருக்கிறது.
வேடம் கலைந்தால்
மேடை போய்விடும்.
நான் அவர்களுடைய
அம்பலம்.
கவனி!
அம்பலம்
என் மேடையல்ல.
நடனம்.
அதனால்தான் என்னைப்
பித்தன் என்கிறார்கள் என்றான்.
நான் உடைந்தேன்.
காலம் காலமாய்த்
திரண்டிருந்த சீழ்
வடிந்தது.
(கவிக்கோ அப்துல் ரகுமானின் “பித்தன்” கவிதைத் தொகுப்பிலிருந்து)

2.
ஆன்மாவின் விபச்சாரம்


உலகுக் கெல்லாம்
ஒருவனே தலைவன்
தலைவணக் கம்அந்தத்
தலைவனுக் கேயென
அறவுரை கூறிய
ஆன்றோர் களையே
அவதாரம் என்பதும்
அவரடி வீழ்வதும்
தலைவனை ஆகழும்
தற்குறித் தனமே
அரும்பிய துருவமீன்
அதனை நோக்கியே
திரும்ப வேண்டிய
திசைகாட் டியின்முள்
மின்மினிக் கெல்லாம்
மேனி திருப்பினால்
கப்பல் எப்படிக்
கரைபோய்ச் சேரும் ?
தலைவன் ஒருவனைத்
தலையால் வணங்குவதே
தலைகற் பாகும்
தலைவனை அன்றி
மற்ற வற்றை
மகேசன் என்றே
தொழுவது கொடிய
தொழுநோய் ஆகும்
மேலும் அது
ஆன்மா செய்யும்
விபச்சாரம் ஆகும்
- கவிக்கோ அப்துல் ரகுமான்

3. ராவணனை எல்லோரும் வில்லனாகப் பார்க்கையில் கவிக்கோ அவர்களின் பார்வை சற்று வித்தியாசமாக இருந்தது.
இருகண் படைத்தவனே
இவள் அழகில் எரிந்திடுவான்!
இருபது கண் படைத்த நான்
என்ன செய்வேன்?
என்று சீதையைப் பார்த்து ராவணன் சொல்வதாக புனைந்த கவிதை அவரை பிற கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பித்தது.

4. கஜல் ஓர் அறிமுகம்.
‘கஜல்’ அரபியில் அரும்பி, பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.
‘கஜல்’ என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள். கஜல் பெரும்பாலும் காதலையே பாடும், அதுவும் காதலின் சோகத்தை. ‘கஜல்’ இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
- அப்துல் ரகுமான்.
அப்துல் ரகுமான், கஜல் எனும் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். ஆனால்,உருதுவில் ‘மிர்சாகாலிப்’ தான். கஜல் என்றாலே அதில் ‘மிர்சாகாலிப்’பின் வாசம் வீசும்.’ என்கிற அளவுக்கு அதில் அவர் சிறந்த கவிஞர். அவரின் கஜல் ஒன்று…
காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது ஒரு
வினோதமான நெருப்பு!
பற்றவைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது!
- மிர்சாகாலிப்
அப்துல் ரகுமானின் கஜல் துளிகள் சில…
நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்
*******
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
*********
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.
*******
மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது
************
என் கனவு
உன்முன் ஏந்திய
பிச்சை பாத்திரம்
*******
உன் கண்களால்தான்
நான் முதன் முதலாக
என்னைப் பார்த்தேன்.
- அப்துல் ரகுமான்

4.

Monday, August 23, 2010

ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் :மஹேஷ் முணசிங்ஹ

முதியோர்
காயமுற்றோர் மற்றும் நோயாளிகள்
குழந்தைகள் - வயதுவந்தோர்
பிணக்குவியல்களை
நிறைய நிறையக் கண்ணுற்றேன்
பாவங்களை ஊக்குவிக்கும்
துறவிகளின் உருவங்களைக் கண்டேன்
*பிரித் நூலும் கட்டப்பட்டது
'நாட்டைக் காக்கும்' எனக்குக் காவல் கிட்டவென
பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து
விழி சதை இரத்தமென தானம் செய்து
உங்களிடம் வந்துள்ளேன்
ஆனாலும் புத்தரே
உங்களது பார்வை மகிமை மிக்கது
கிராமவாசிகளுக்கு மறந்துபோயிருக்கும்
மனைவி குழந்தைகளோடு
நலம் வேண்டிப் பாடும்
சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே
எனது தலையை ஊடுருவும்
உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்
கண்ணெதிரே தோன்றுகின்றனர்
என்னால் கொல்லப்பட்ட மனிதர்கள்
ஆங்காங்கே வீழ்ந்துகிடந்த
அவர்கள் மெலிந்தவர்கள்
துயருற்ற ஏழைகள்
ஒரே நிறம்
ஒரே உருவம்
எல்லோருக்குமே
எனது முகம்
நூறு ஆயிரமென
நான் கொன்றொழித்திருப்பது
என்னையேதானா
பாளிச் செய்யுள்களை இசைக்கின்ற
சிறிய பிக்குகள்
பின்னாலிருந்து
நீங்கள் தரும் புன்முறுவல்
தென்படாதிருக்க இரு விழிகளையும் மூடிக்கொள்கிறேன்
கரங்கள் தென்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்
வணங்குவதற்குக் கூட உயர்த்தாமலிருக்கிறேன்
பிரித் நூல் - பாதுகாவல் தேடி, புத்தரை வணங்கி, உடலில் கட்டப்படும் நேர்ச்சை நூல்.



மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,

வஸ்ர்து

தலைப்பு புரிபடாமல் குழம்ப வேண்டாம். வாஸ்து என்கிற வார்த்தை தான் அது!



அந்த வார்த்தைக்கு இன்னும் மதிப்பு ஏற வேண்டுமானால் முதல் எழுத்து குறிலாக இருக்கவேண்டும் என்கிறபடியால் அந்த 'காலை' [சன்னல்] எடுத்து அடுத்த எழுத்துக்குப் பக்கத்தில் போட்டு விட்டோம். ஒற்றைப்படை இலக்கத்தில் எழுத்துகள் இருப்பதை விடவும் இரட்டைப்படை இலக்கத்தில் இருந்தால் நல்லது என்கிற அடிப்படையில் 'த்' என்கிற ஒரு எழுத்தை இணைத்து விட்டோம். அவ்வளவே!



வாஸ்து சாஸ்திரத்தை போதிப்பவர்களையும் அதை கடைபிடிப்பவர்களையும் நையாண்டி செய்யும் நோக்கம் இந்தக் கட்டுரைக்கு இல்லை. இதை சாக்காக வைத்து காசு அள்ளுபவர்களுக்கும் வீணாய் தங்களைத் தாங்களே குழப்பிக் கொண்டு இதைப் பரீட்சித்துப் பார்ப்பவர்களுக்கும், தங்கள் பெயர்களில் க்,ச்,ட்,த் என்று சேர்த்துக் கொண்டு புகழ் தேடப் பார்க்கும் புள்ளி ராஜாக்களுக்கும் தான்!



ஜாதகத்தை கையில் வைத்துக் கொண்டு ஏழாம் வீடு, எட்டாம் வீடு, ஒன்பதாம் வீடு, குரு, சனி, சுக்ரன், அவன் இவனைப் பார்க்கிறான், இவன் அவனைப் பார்க்காமல் இருக்கிறான், அதனால் தான் உனக்கு வேலை கிடைக்கவில்லை, ஆனால் சீக்கிரம் கல்யாணம் ஆகும் என்றெல்லாம் குழப்பப் படுத்தப் பட்டுக் கொண்டிருந்த மகா ஜனங்கள் இப்போது காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு வாஸ்து சாஸ்திரத்தைத் தங்கள் இதயத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஜாதகத்தில் தோஷம் இருந்தால் ஒரு ஆலமரத்தை சுற்றியோ, கோவிலில் விளக்கேற்றியோ, புற்றுக்குப் பால் வார்த்தோ 'இனி நல்லது நடக்கும்' என்று மனதுக்குள் சமாதானப்பட்டுக் கொண்டவர்கள், வீட்டில் இருக்கிற வாசலை மூடிவிட்டு, இன்னொரு பக்கம் புதிய வாசலை உருவாக்குகிறார்கள். கிழக்கை வடக்கு பண்ணுகிறார்கள், வடக்கை தெற்கு பண்ணுகிறார்கள், போகிற போக்கில் மேல் மாடிக்கு செல்ல படிகளே இருக்கக் கூடாது என்கிற விதத்தில் இது போய் முடிய வாய்ப்புகள் இருக்கின்றன.



வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த கரடு முரடான பாதை தான் அது. எப்போதும் இன்பம் இருந்தால் திகட்டிப் போகும் என்பதால் துன்பங்களும் சேர்ந்து அனுபவித்துத் தான் ஆக வேண்டும். இது தெரிந்த விஷயம் தானே? மேடு இருக்கும் போது மீசை முறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு, பள்ளம் வரும் போது தடுமாறிப் போகிறார்கள். இன்பம் வந்த சமயம் 'துன்ப வேளையில் இப்படி நடந்து கொள்ள வேண்டும்' என்று முன்னேற்பாடாக திட்டங்கள் தீட்டி எந்நாளும் பொன்னாளாய் களியாட்டம் போடுவதை விடுத்து, இன்பத்தில் கண்கள் மூடி அனுபவித்து துன்பத்தில் கண்களையே மூட முடியாமல் உழல்கிறார்கள்.



துன்பம் வரும்போது தான் எல்லோருக்கும் இறைவன் இருக்கும் உண்மையே தெரிய வருகிறது. கோவில் வாசலில் ஒரு அவசர என்.சி.சி. ஸ்டைல் சல்யூட் அடித்து சென்று கொண்டிருக்கிறவர்கள், கோவில் உள்ளே போய் சரியாக எண்ணிப் பார்த்து ஒன்பது தடவை சுற்றுகிறார்கள். எட்டு தடவை அல்லது பத்து தடவை என்றால் கிரகங்கள் ஏமாற்றி விடுகிற சாத்தியங்கள் இருக்கின்றன என்று சரியாக 'எண்ணி' கர்மம் 'துணிகிறார்கள்'!



பத்து வருடங்களாக ஒரே வீட்டில் இருக்கிறீர்கள். திடீரென்று ஒரு நாள் வாஸ்து சரியில்லை என்று காரணம் காட்டி வீட்டில் திருத்தங்கள் செய்கிறீர்கள். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காலம் அதே வீட்டில் நீங்கள் வசித்த போது உங்களுக்குக் கிடைக்கப் பெற்ற அருமையான பலன்களை ஒரு சில நிமிடங்களில் மறந்து விடுவது ஏன்? 'வருகிற பணம் எல்லாம் எங்கு போகிறது என்று தெரியாமல் போய்விடும். செலவு கையைக் கடிக்கும். அதற்குக் காரணம் வீட்டில் உள்ள ஒரு அறை' என்று சொல்லப் படும் போது, அதற்காக செலவு செய்யத் தயாராக இருக்கிறீர்கள். இருக்கிற செலவோடு இதுவும் சேர்ந்து அதிக செலவு என்று மனதிற்குத் தோன்றுவது கிடையாது. வருகிற பணம் எல்லாம் போய்விடுகிறது என்பதற்கு முதல் முக்கிய காரணம் சரியாகத் திட்டமிடவில்லை என்பது தானே? அப்படி ஏதாவது திருத்தம் செய்தால் தான் இந்த நிலை மாறும் என்றால் அதை செய்ய வேண்டியது வீட்டின் மேல் மாடியில் அல்ல, உங்கள் மேல் மாடியில் தான், அதாவது உங்கள் மூளையில்! வீட்டின் மூலைகளுக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.



"நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு உங்கள் பெயர் 'வ' அல்லது 'வா' அல்லது 'வி' என்கிற எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும்" என்று 'பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சியில் எழுத்து கொடுப்பது போல் சொல்வார்கள். 'பெயரை மாற்றுங்கள், அப்புறம் பாருங்கள், உங்கள் புகழ் ஓகோவென உயர்ந்து போகும்' என்பார்கள். நீங்கள் பிறந்து ஒரு இருபது இருபத்தைந்து வருடங்கள் ஒரு பெயருடன் வாழ்ந்த பிறகு, திடீரென்று ஒரு நாள் இந்த மாற்றம் தேவை தானா? பெயர் மாற்றத்தை விடவும் பெயருக்குள்ளேயே செய்யும் மாற்றங்கள்- ஆகா, பெயரில் இருக்கும் எழுத்துகளின் கூட்டுத் தொகையை அதிகமாக்க எழுத்துகளை அதிகமாக்குவார்கள். இதில் வேறு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண் கொடுத்து அதைக் கூட்டும் போது உங்கள் பிறந்த தேதிக்குத் தோதாக அது இருக்கிறதா என்று பார்க்க சொல்வார்கள்.



எழுத்தாளர்கள் வைத்துக் கொள்ளும் புனைப் பெயர் போல் ஒவ்வொருவருடைய இயற்பெயரும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. சில சமயம் நான் நினைப்பதுண்டு - இந்த புனைப் பெயர் என்கிற வார்த்தையில் முதல் எழுத்தை மாற்றி, 'பூனைப் பெயர்' என்று மாற்றினால் அந்த வார்த்தைக்கு இன்னும் மவுஸ் [எலி அல்ல!] அதிகரிக்குமோ என்று!



இந்திய வாஸ்து செய்து அலுத்து விட்டது என்று இப்போது சீனா, ஜப்பான் என்று மேலை நாட்டுப் பழக்க வழக்கங்களை இறக்குமதியும் செய்ய ஆரம்பித்து விட்டோம்.



ஏதோ வாயில் நுழையாத ஒரு பெயரை சொல்லிவிட்டு அதன்படி மீன் தொட்டியை வீட்டில் ஒரு மூலையில் வைத்தால் வீட்டில் உள்ள தீய சக்திகள் ஓடிப் போகும் என்று ஒருவர் குறிப்பிட்டார். வீட்டில் உள்ள தீயசக்தி என்பதைத் தன் மாமியாருக்கு உருவகப் படுத்திக் கொண்டாரோ என்னவோ, அந்த்ப் பெண்மணி உடனே மீன் தொட்டி வாங்கும் காரியத்தில் இறங்கிவிட்டார். ஏற்கனவே துண்டு விழும் பட்ஜெட்டில் இன்னும் ஒரு பத்து பதினைந்து துண்டுகள் விழ வைத்து மீன் தொட்டி வாங்கிவிடத் திட்டம் போட்டார்.



மேல்மாடியில் படிக்கட்டுகள் முடிகிற இடத்தில் இடப் பக்கம் இது வைக்கப் பட வேண்டும் என்று இடம் குறிக்கப் பட்டது. "வரவேற்பறையில் வைக்கலாமே?" என்று அவர் சந்தேகம் கேட்க, நம் வெளிநாட்டு வாஸ்து வல்லுநர் மறுத்து விட்டார். "அது தான் சரியான இடம். உங்கள் மனதிற்கு இடையூறு கொடுத்துக் கொண்டிருந்த எல்லா கவலைகளும் பறந்தோடி விடும். தீய சக்திகள் எல்லாம் படிக்கட்டுகளில் இறங்கி வீட்டை விட்டு மறைந்து விடும்" என்றெல்லாம் சொல்லப் போக, ஒரு குறிப்பிட்ட நாளின் மாலை நேரம் மீன் தொட்டி வீட்டில் வந்து இறங்கியது. மன்னிக்கவும், மேல் ஏறியது.



"ஆகா, என்ன அழகாக இருக்கிறது! இதில் தண்ணீர் ஊற்றி மீன்களையும் விட்டு விட்டால் இன்னும்அழகு கூடிப் போகும்!" என்று திருஷ்டி கழித்தார்.



தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தார்கள். அதற்கு நேரம் எல்லாம் பார்த்து ஸ்பெஷல் பூஜை எல்லாம் செய்தார்கள். பார்ப்பதற்கு ஒரு சின்ன தொட்டி போல் தெரிந்த அதில் இவ்வளவு தண்ணீர் ஊற்ற முடியுமா என்று வியக்க ஆரம்பித்தது குடும்பம். கிட்டத்தட்ட எழுபத்தைந்து லிட்டர் தண்ணீர் ஊற்றப் பட்டதும், தொட்டி நிரம்பிப் போனது.



தீய சக்திகள் இன்றைக்கே போய்விடுமா? அல்லது மீன்கள் தொட்டிக்குள் வந்த பிறகு தான் போகுமா என்று புதிய குழப்பத்துடன் எல்லோரும் தூங்கப் போனார்கள்.



இரவு இரண்டு மணி இருக்கும். டம்மென்று ஒரு பெரும் சத்தம். சலசலவென்று குற்றால அருவிநீர் மேலிருந்து கீழ் விழுவது போல் ஒலி! குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக எழுந்து வந்து அந்த கோலாகலக் காட்சியைக் கண்டார்கள்.



மீன் தொட்டி விரிசல் கண்டு அதில் இருந்த தண்ணீர் எல்லாம் அதிபயங்கர வேகத்தில் படிகளில் இறங்கிக் கொண்டிருக்க, வாயடைத்துப் போய் நின்றிருந்தனர்!



விஷயத்தைக் கேள்விப்பட்டு அடுத்த நாள் நாங்கள் அவர்கள் வீட்டுக்கு சென்றிருந்தோம். எல்லோரும் கண்களின் கீழே புதிதாகக் கரு வளையங்கள் மாட்டியிருந்தார்கள்!



"எழுபது லிட்டர் தண்ணீர் இல்லையா? எல்லாம் சுத்தம் செய்து முடிக்க காலை ஏழு மணி ஆகி விட்டது! தூக்கமே இல்லை!" என்று வருத்தப் பட்டுக் கொண்டார் அந்தப் பெண்மணி.



"சும்மாவா? தீய சக்திகள் வெளியேறும் போது இது மாதிரி எல்லாம் ஏதாவது செய்து விட்டுத்தான் வெளியேறும். நான் ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன்!" என்று சமயம் தெரியாமல் நான் சொல்ல, என்னையே ஒரு தீயசக்தி போலப் பார்த்தார் அந்தப் பெண்மணி!
நன்றி: http://tamil.sify.com/

வாந்தி எடுப்பவனை ஊக்குவிக்கும் விதமாகத் தேர்வு முறைகள்

சுதந்திரம் என்ன சுக்கா? மிளகா? என்றெல்லாம் கவிதை எழுதிவிட்டார்கள். சுக்கும் இல்லை, மிளகும் இல்லை என்பதை மெதுவாகச் சொன்னால் கூட தேசியவாதிகள் பிழிந்து எடுத்துவிடுவார்கள். ஆனால் இந்த வெங்காய பஜ்ஜி அல்லது சுதந்திரத்தைப் பற்றிக் கொஞ்சமாவது பேசத் தோன்றுகிறது.

நாம் கொண்டாடும் சுதந்திர தினம் வெள்ளையர்கள் வெளியேறிய நினைவு நாள் என்பதனைத் தவிர்த்து, சுதந்திரம் என்பதற்கான எந்தவிதமான பொருளும் அதற்கு இல்லை. சுதந்திரம் என்ற பெயரில் வெள்ளையர்களை வெளியேற்றிவிட்டு மக்களையும் அவர்களின் உழைப்பினையும் சுரண்டிக் கொள்ளும் உரிமையை உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் கொடுத்திருக்கிறோம்.

வெள்ளையன் வாழ்ந்தபோது அவனை எதிர்த்துப் பேசியவர்களை சிறைகளில் அடைத்தார்கள், கல் உடைக்கச் செய்தார்கள், செக்கிழுக்க வைத்தார்கள் என்று பாடப்புத்தகங்களில் படித்ததுண்டு. இன்றைய சுதந்திர தேசத்தில் அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் பேசுபவர்கள் மீது வெள்ளையன் காலத்தில் பாய்ந்ததை விடக் கொடூரமாக சட்டம் பாய்கிறது . அதோடு சேர்ந்து ரவுடிகளும் பாய்கிறார்கள்.

இந்த அடக்குமுறை ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்து இன்று வரையிலும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்திற்கும் சுதந்திர ஆட்சி முறைக்கும் அடக்குமுறை மட்டுமே ஒற்றுமையில்லை. ஆனால் இந்த அடக்குமுறைதான் சுதந்திரம் என்ற சொல்லின் பொருளுக்கு எந்தவித அர்த்தமும் இல்லாமல் செய்வது.

சுதந்திரம் பெற்றதன் மிகப் பெரிய வெற்றியே பரந்த அளவிலான முதலாளித்துவ சமூகத்தையும் மொன்னையான நடுத்தர வர்க்கத்தையும் நாடு முழுவதுமாக பரவச் செய்ததுதான். ஆரம்ப காலங்களில் அமைச்சர்களும் இன்னபிற அதிகாரிகளும் உள்நாட்டு முதலாளிகளுக்கு தரகர்களாகச் செயல்பட்டு அவர்களின் தொழிலும் வியாபாரமும் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் கம்பளம் விரித்தார்கள். அதற்குப் பிரதிபலனாக கமிஷன் பெற்றுக் கொண்டிருந்தார்கள். தொண்ணூறுகளில் உலக மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் என்ற பெயரில் உள்நாட்டு முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை விட பன்மடங்கு வரவேற்பு வெளிநாட்டு முதலாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்தக் கட்டம் வரைக்கும் தரகர்களாகச் செயல்பட்டு வந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அவர்தம் குடும்பங்களும், துணிந்து தாங்களும் 'சுதந்திர நாட்டில்' தொழில் தொடங்கினார்கள். இப்பொழுது ஜனநாயகம் பட்டொளி வீசிப் பறக்க சுதந்திர தேசம் என்ற பெயரில் ஒரு முழுமையான முதலாளித்துவ அல்லது நியோ காலனிய நாட்டில் வசித்து வருகிறோம்.

நடுத்தர வர்க்கத்திற்கு ஒரு வித்தியாசமான குணம் உண்டு. சமூகத்தில், அரசியலில் அல்லது தன்னைச் சுற்றி நிகழும் எந்த எதிர்மறையான விஷயங்களைப் பார்த்தாலும் இந்த நடுத்தரச் சமூகம் கோபம் கொள்ளும். ஆனால் அதே சமயத்தில் அந்தக் கோபத்தை அடுத்தவனுக்குக் கூடத் தெரியாமல் மறைத்துக் கொள்ளும். எதிலும் துணிந்து கருத்துச் சொல்லவோ, அப்படியே கருத்துச் சொல்லிவிட்டாலும் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்காமல் சாலையில் இறங்கிப் போராடவோ தைரியமில்லாத ஒரு சமூகம் அது. இந்த மொன்னையான சமூகத்தை 'சுதந்திர' தேசம் முழுவதும் பரவச் செய்ததில் சுதந்திர நாட்டின் அரசாங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.

இந்த மொன்னைச் சமூகத்தை உருவாக்குவது மிக எளிது. சிறுவயதிலிருந்தே எந்தவிதமான சமூகப் பிரக்ஞையும் இல்லாத, தான் வாழும் ஊர் பற்றியோ அல்லது பகுதி பற்றியோ எந்த அறிவினையும் தராத தட்டையான பாடங்களைக் கற்கச் செய்ய வேண்டும். உண்மையான வரலாறுகள் மறைக்கப்பட்டு போலித்தலைவர்களும், விளம்பரதாரிகளும் தலைவர்களாகவும் தியாகிகளாகவும் சித்தரிக்கப்பட்ட பாட முறை அமைய வேண்டும். அதற்கு ஆளும் வர்க்கத்துக்கு ஜால்ரா அடிக்கும் கல்வியாளர்களைப் பாடத்திட்டக் குழுவில் நியமனம் செய்யவேண்டும். தன் முன்னோர்களின் வாழ்வியல், தனித்துவமான விவசாய முறைகள் போன்றவற்றைப் பற்றி எந்த அறிவும் இல்லாத ஒரு சமூகம் உருவாக்கப்பட்டால் அந்தச் சமூகம் ஆளும் வர்க்கத்திடம் கேட்பதற்கென எந்தக் கேள்வியும் இருக்காது.

கற்கும்போது பாடங்களைப் புரிந்துக் கொண்டு படிப்பவனை விடவும் மொத்தமாக மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தி எடுப்பவனை ஊக்குவிக்கும் விதமாகத் தேர்வு முறைகள் அமையவேண்டும். இவ்வாறு படிக்கும்போது மாணவர்களின் சிந்திக்கும் திறனை, பெருமளவில் மழுங்கடிக்கச் செய்யமுடியும். இப்படி உருவாகும் மழுங்கல் தன்மையுடையவர்களுக்கு ஓரளவுக்கு சம்பளத்துடன் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளை முதலாளிகளுடன் சேர்ந்து உருவாக்கித் தந்துவிட வேண்டும். அவ்வளவுதான், அரசாங்கத்தின் பணி. வாங்கும் சம்பளத்தில் ஒரு இடம் வாங்கி வீடு கட்டி, குழந்தைகளைப் படிக்க வைத்து, அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து என்று அவன் தன் கடமைகளில் மூழ்கி உருண்டு கொண்டிருப்பான். காலப்போக்கில் இவ்வாறாக எதைப் பற்றியும் கண்டுகொள்ளாத அல்லது கண்டுகொள்ளும் பட்சத்தில் அமைதியாக இருக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கிவிட முடியும். இதைத்தான் இந்த அரசாங்கங்கள் அறுபதாண்டுகளில் வெற்றிகரமாகச் செய்திருக்கின்றன.

Friday, August 13, 2010

நண்பர்களின் பிறந்த நாளை சுலபமாக் கண்டுபிடி

உங்க நண்பர்களின் பிறந்த நாளை சுலபமாக் கண்டுபிடிக்கிற கணக்கு!

முதல்ல உங்க நண்பரை

1. அவருடைய பிறந்த நாளின் மாதத்தை 4 ஆல் பெருக்கச் சொல்லுங்க

2.விடையுடன் 13 ஐக் கூட்டச் சொல்லுங்க.

3.அதை 25 ஆல் பெருக்கச் சொல்லவும்.

4.வரும் விடையிலிருந்து 200 கழிக்கவும்.

5.அத்துடன் பிறந்த தேதியின் எண்ணைக் கூட்டச் சொல்லவும்.

6.அதை 2ஆல் பெருக்கி

7.அதிலிருந்து 40 ஐக் கழிக்கவும்.

8.மறுபடியும் 50 ஆல் பெருக்கி

9.அத்துடன் அவர் பிறந்த வருஷத்தின் கடைசி 2 எண்களைக் கூட்டச் சொல்லவும்.

10.ஹாஹா இனிதான் உங்க மேஜிக் ஆரம்பம்...இதுவரை அவர் கூட்டிக் கழித்து பெருக்கி முடித்த தொகையை மட்டும் சொல்லச் சொல்லவும்.

அதை வைத்து ஒரு சின்ன மேஜிக் செய்தால் அவ்ர் பிறந்த மாதம்,தேதி,வருஷம் எல்லாம் சுலபமாகச் சொல்லி விடலாம்.

அந்த மேஜிக் செய்யவும் ஒரு நெம்பர் தேவை அது என்னன்னு அடுத்த பதிவில் சொல்றேன்.

டிஸ்கி:சும்மா டெஸ்டுக்காக குட்டீஸ்களோ அல்லலது அவர்களின் அண்ணாக்களோ 9வது படியில் வந்த தொகையை மட்டும் சொல்லுங்க .அவங்க பிறந்த நாள் சொல்றேன்.

டிஸ்கி 2:இவ்வளவு கணக்கு போடுவதற்கு பதில் நானே பிறந்த நாள் சொல்லிடுறேன் என்று நண்பர் சொன்னால் அவர் கணக்கில் மந்தம் னு அர்த்தம் ஹாஹாஹா..
அன்புக் குழந்தைகளே

பெரிய பிள்ளைகளுக்கு வாய்ப்பாடு நன்கு தெரிந்திருக்கும்.
சின்னப் பிள்ளைகளுக்கு பெருக்கல் வாய்ப்பாடு கொஞ்சம் சிரமம் தானே?

இதோ ஒரு எளிய ஒன்பதாம் வாய்ப்பாடு!!!.நோட்டுப் புத்தகம் பேனா உதவி இல்லாமல் கையாலேயே மிகச் சுலபமாய் ஒரு 9 ஆம் பெருக்கல் வாய்ப்பாடு!!!!.
[அதுக்கு மட்டும் தான் சாத்தியம் பிள்ளைகளே!!!

செய்ய வேண்டியது:

1.உங்கள் இரு கைகளையும் உள்ளங்கை தெரியுமாறு விரித்துக் கொள்ளுங்கள்.

2.இடது கை விரலில் இருந்துதான் 1 முதல் 10 வரை எண்ணத் தொடங்க வேண்டும்.

3.எந்த எண்ணை ஒன்பதால் [9 ஆல்] பெருக்க நினைக்கிறீர்களோ அந்த எண்ணுள்ள விரலை மடக்கிக் கொள்ளவும்.

4.பின்பு இடது பக்கத்தில் மீதமுள்ள கை விரல்களையும் வலது பக்கத்து மீதமுள்ள விரல்களையும் சேர்த்தால் அதுதான் அந்தக் கணக்கின் விடை.

என்ன குழம்புகிறதா?

உதாரணமாக 9x4=36





உங்கள் இடது கையில் 4வது விரலை மடக்கியிருப்பீர்கள்.[ஏனெனில் 4 ஆல் பெருக்க]
4 வதுக்கு முன் மீதமுள்ளவை =3 விரல்கள்.
4 வதுக்குப் பின் உள்ளவை 6[இடதில்1+வலதில்5]

3...6..=36 தான் விடை

இன்னொரு கணக்கு 9x7=63

என்ன பிள்ளைகளா மிகச் சுலபமாய்த் தோன்றுகிறதா? இனி ஒன்பதாம் வாய்ப்பாடுன்னா பயமில்லைதானே?

மனுஷ்ய புத்திரன் கவிதைகள்-2

ஒரு காதலை தெரிவிக்கும்போது

ஒரு சிறு பெண்
தயங்கித் தயங்கி

தன் காதலை தெரிவிக்கிறாள்




அது அவள் முதல் காதலாக இருக்கவேண்டும்

அல்லது ஒவ்வொரு காதலையும்

தெரிவிக்கும்போதும்

அவள் அவ்வளவு

குழப்பமடைபவளாக இருக்க வேண்டும்




உண்மையிலேயே அது

புத்தம் புதியதாக இருந்தது

அப்போதுதான் உறையிலிருந்து

பிரிக்கபட்ட ஆடையின் வாசனையை

அ து நினைவூட்டுகிறது




அவளுக்கு ஒரு காதலை

எப்படித் தெரிவிக்கவேண்டும்

என்பதுகூட தெரிந்திருக்கவில்லை


அப்போது அவள் வீட்டைப் பற்றி பேசினாள்

அம்மாவைப்பற்றி பேசினாள்

பக்கத்துவீட்டு குழந்தைகளைப் பற்றி பேசினாள்

ஒரு அபத்தமான கனவைப் பற்றி பேசினாள்




அவள் விரும்பியதற்கு

நேர் எதிரானதையே

அவள் பேசினாள்



அது தவறாகவே புரிந்துகொள்ளப்படும்என்று

அவள் அஞ்சினாள்

ஆனால் அது சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டபோது

மிகவும் வியப்படைகிறாள்




தற்செயலாக திறந்துவிட்ட

ஒரு அறையின் எதிர்பாராத காட்சியில்

அவள் அப்படியே நின்றுகொண்டிருக்கிறாள்




அதைச் சொல்லும்போது அவளுக்கு

அவள் ஒத்திகை பார்த்த எதுவுமே

நினைவுக்கு வரவில்லை




அதை ஒரு உணர்ச்சிகரமானநாடகமாக

கையாளவே அவள் விரும்பினாள்

ஆனால் ஒரு நகைச்சுவைக் காட்சியைப்போல

அதைக் கையாண்டாள்




ஒரு காதலைத் தெரிவிப்பது

இன்னொரு மனிதனை முழுமையாக

சந்திப்பது என்பது அவளுக்குத் தெரியாது

அவள் அதை முதலில்

ஒரு சுவாரசியமான விளையாட்டாகவே தொடங்கினாள்

ஆனால் அந்தச் சந்திப்புநீணடதாக இருந்தது





ஒருவரை முழுமையா சந்திப்பது

அவ்வளவு பாரமானது என்று

அவள் யோசித்ததே இல்லை



அவள் திரும்பிப்போக விரும்பினாள்

அவளுக்கு அவளாக மட்டும் கொஞ்சம்

மூச்சுவிட வேண்டும்போல இருந்தது

ஆனால் அந்த சந்திப்புமுடிவடைவதாகவே இல்லை




அவள்

எல்லாவற்றையும்முழுமையாக

நம்பவிரும்பினாள்

எல்லாவற்றையும் முழுமையாக

சந்தேகிக்க விரும்பினாள்

தனக்கு யோசிக்க

வேறு விஷயஙகளே இல்லையாஎன்று

அவளுக்கு எரிச்சலாக இருந்தது

ஆனால் அவள் அதையே யோசித்தாள்




ஒரு சிறுபெண்

தனது காதலை தெரிவிக்கும்போது

அவ்வளவு நிராயுதபாணியாய் இருக்கிறாள்




இந்த உலகத்தின் மீது வைக்கும்

கடைசி நம்பிகையைப்போல

கருணையின்மைகளுக்கு முன்னே

ஒரு கடைசி பிரார்த்தனையைப் போல



அவ்வளவு பிரகாசமாக இருக்கிறது
அது




மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன் கவிதைகள்- 1

கடவுளுடன் பிரார்த்தித்தல்

இன்று நீ
கைவிடப்பட்டிருக்கிறாய்

அல்லது அது
உன்னைப் போன்ற
யாரோ ஒருவராகவும் இருக்கலாம்

இது உனக்கு நிகழ்வது
எத்தனையாவது முறை
என்று நீ எண்ண வேண்டியதில்லை

ஒரு குழந்தையாக
மீண்டும் பிறப்பதுபோல
ஒரு துரோகத்திலிருந்து
அல்லது
ஒரு கைவிடப்படுதலிருந்து
நீ புத்தம் புதியதாய்
உன் பூமிக்குத் திரும்புகிறாய்

நீ கைவிடப்படும்போதுதான்
உன் பிரியத்தின் கனல் எரியத் தொடங்குகிறது
பிரியமற்றுக் குளிர்ந்த ஒவ்வொரு கரத்தையும்
அந்தக் கனல் வெதுவெதுப்பாக்குகிறது

கைவிடப்படும்போது
நீ தனியாக இருப்பதாக உணர்கிறாய்
ஆனால் நாம் தனியர்கள் அல்ல

இந்த உலகம்
கைவிடப்பட்ட பெண்கள்
கைவிடப்பட்ட குழந்தைகள்
கைவிடப்பட்ட முதியவர்கள்
கைவிடப்பட்ட குடிகாரர்கள்
கைவிடப்பட்ட பைத்தியங்கள்
கைவிடப்பட்ட உபயோகமற்றவர்கள்
கைவிடப்பட்ட நோயாளிகள்
கைவிடப்பட்ட உடல் சிதைக்கப்பட்டவர்கள்
கைவிடப்பட்ட தண்டிக்கப்பட்டவர்கள்
கைவிடப்பட்ட காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்
கைவிடப்பட்ட கிறிஸ்துகளின்
உலகம்

அரவணைக்கப்பட்டவர்களைக் காட்டிலும்
பிரமாண்டமாக வளர்ந்துவிட்டது
கைவிடப்பட்டவர்களின் சமூகம்
நாம் பயப்பட ஒன்றுமில்லை

கைவிட்டவர்களை
நாம் தண்டிக்கவோ
மன்னிக்கவோ ஒன்றுமே இல்லை

மாறாக கைவிடப்படுதல் துக்கமல்ல
ஓரு நீண்ட கனவு தரும் களைப்பு

ஒரு பழக்கத்தை விட்டுவிடும் சமன்குலைவு


இன்று உன்னை
ஒருவர் கைவிடும்போது
கடவுள் உனக்காகப் பிரார்த்தனை செய்கிறார்

கைவிடப்பட்ட எல்லோருக்காகவும்
அவர் முடிவில்லாத பிரார்த்தனைகளைச் செய்துகொண்டிருக்கிறார்

நீ கைவிடப்படும்போது மட்டுமே
கடவுளோடு சேர்ந்து பிரார்த்திக்கும்
மகத்தான வேளை
உனக்குக் கிடைக்கிறது

10.02.06

நன்றி: கடவுளுடன் பிரார்த்தித்தல்

தமிழ் சினிமாவில் கலை: வணிகப் படங்கள் - கலைப் படங்கள்

நீங்கள் விளம்பரப் படங்களை ரசித்துப் பார்ப்பதுண்டா?

பெரும்பாலானோரின் பதில் ‘ஆம்’ என்பதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். என்னளவில், பல வருடங்களுக்கு முன் வந்த, காதலன் கிரிக்கெட் மட்டை பிடித்து சதம் அடிக்க, கட்டுப்பாடுகளை மீறி காதலி நடு மைதானத்தில் நடனமிடும் காட்பரி டைரி மில்க் விளம்பரமும், எங்கு சென்றாலும் தொடரும் ஹட்ச் நாய்க்குட்டியும், ப்பபரப்பப் பாபபா என்று இசைக்கும் ந்நெஸ்கேஃபே… விளம்பரமும், ஏ.ஆர்.ரகுமான் தோன்றும் ஏர்டெல் இசையும், கொண்டாட்டமாக நினைவில் நிற்பவை. சமீபத்தில் நைக் நிறுவனத்திற்காக செய்யப்பட்ட சில வேடிக்கையான விளம்பரங்கள் நடைபாதை கடையொன்றில் குறுந்தகடுகளாகக் கிடைக்க, பேரம் பேசாமல் வாங்கி வந்து போட்டுப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன்.



அதே சமயம், எத்தனை தான் அற்புதமான விளம்பரம் என்றாலும் அவற்றைக் கலை அளவீடுகளோடு குழப்பிக் கொள்வதென்பது எனக்கு ஒருபோதும் நேர்ந்ததில்லை.

விளம்பரத்துறையின் பெரும் நிபுணர்களுள் ஒருவராக எந்த தேசத்தவராலும் மதிக்கப் படும் டேவிட் ஆகில்வி, தன் புத்தகத்தில் "வாடிக்கையாளன் விளம்பரம் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்கிறது என்று வியந்தோதுவதை விட அந்த விளம்பரத்தின் மூலம் அவன் அந்தப் பொருளை வாங்கினானா என்பதே முக்கியமானது, அதற்கேற்ப விளம்பரம் பின் நகர்ந்து கொண்டு விற்பனைப் பொருளை முன் நிறுத்துவதே அவசியம்" என்கிறார். காரணம், விளம்பரங்கள் முழுக்க முழுக்க வணிக நோக்குடன் சமைக்கப் படுபவை. விற்பனைதாரரை, வாங்குவோருடன் தொடர்புபடுத்துவதே அவற்றின் பணி; எவ்வளவு தான் ரசிக்கக் கூடியதாக இருந்தாலும் வணிகத்துக்கு மேலான நோக்கு அவற்றில் இருக்க வழியில்லை. ஆகவே, விளம்பரப் படங்களை வணிகப் படங்கள் என்று குறிப்பதே பொருத்தமானது. அதனாலேயே தொலைக்காட்சியில் தோன்றும் விளம்பர இடைவேளையை ‘கமர்ஷியல்’ ப்ரேக் என்ற சொல்லால் சுட்டுகிறோம்.

விசித்திரம் என்னவென்றால், விளம்பரங்களுக்குப் பயன்படுத்த வேண்டிய சொல்லை பலர் சினிமாவுக்குப் பயன்படுத்த, கேட்க நேரிடுகிறது. நண்பர்களுடனான பல உரையாடல்களில் கவனித்திருக்கிறேன், ‘கமர்ஷியல் படம் தான் ஆனா நல்லா இருந்துச்சு’, ‘ஒரு நல்ல கமர்ஷியல் படம் எடுக்கணும்பா’, ‘அவர் ஒரு கமர்ஷியல் டைரக்டர்’, வணிகப் படம் என்றாலும் கலையின் கூறுகள் அங்கங்கே தென்படுகின்றன – இப்படி, பல்வேறு சேர்க்கையில் ‘கமர்ஷியல்’ என்ற வார்த்தை சினிமாவுடன் இணைத்துப் பயன்படுத்தப்படுவதை எதிர்கொள்ள நேரிடுகிறது.



முதலில், பிரபலமடைந்து பண வசூலை அள்ளிக் குவித்த படங்களை வணிகப் படங்கள் என்று குறிக்கப்படுகிறது என்று மேலோட்டமாகப் புரிதல் கொண்டிருந்தேன். போகப் போக ஆழ்ந்து கவனித்ததில் இந்த வார்த்தை ஏற்படுத்தும் பிரிவினையால் வணிகப் படங்கள், கலைப் படங்கள் என்று இரு வேறு வகையாக சினிமா தமிழில் பிளவுண்டு அதற்குத் தகுந்தபடியான சூத்திரங்கள் உருவாக்கம் கொள்வதை அறிய முடிகிறது. ‘மிகவும் பிடித்த சினிமா’, ‘குறைவாகப் பிடித்த சினிமா’, ‘பிடிக்கவே பிடிக்காத சினிமா’ - இப்படி மட்டுமே சினிமாவைப் பிரித்தறிய முடிந்த என் போன்ற எளிமையான பார்வையாளனுக்கு இதுபோன்ற பகுப்புகள் ஆச்சரியமும் திகிலும் ஊட்டுவதாகவே இருக்கின்றன; சினிமாவை வேறெதுவோவாக ஆக்கும் குழப்பத்தை தருவிக்கின்றன.

சினிமா என்பது முழுக்க முழுக்க கலை சார்ந்த ஊடகம் – இப்படிச் சொல்வதற்கு முன் கலை என்றால் என்ன என்ற கேள்வியைச் சந்திக்க நேரிடுகிறது.

கலை என்றால் என்ன?

குரங்கிலிருந்து மனிதன் என்கிறது விஞ்ஞானம். குரங்கு மனிதனாகிய பாதையில் இரு உயிரினங்களுக்கிடையே முளைத்த பிரிவினைக்கோடு எது? – மனது என்று அறிகிறோம். மனது என்றால் என்ன? காலம் என்று பதில் கொள்ளலாம். அதாவது உலகைப் பகிர்ந்து கொள்ளும் கோடானு கோடி உயிரினங்களில் ஒரு ஜீவராசி மட்டும் நிகழ்வை இறந்த காலம்-நிகழ் காலம்-எதிர் காலம் என்று மூன்று காலங்களாகப் பிரித்துக் கொள்ளத் துவங்கிய போது ‘மனிதன்’ தோன்றத் துவங்கினான். அதாவது மனது என்ற ஒன்று இருப்பதே மற்ற உயிரனங்களுக்கும் மனிதனுக்குமான வித்தியாசம். வேறு வார்த்தைகளில், நேற்று நடந்ததை இன்றைக்கு இழுத்து வந்து பொருத்திப் பார்த்து நாளை அது எப்படி இருக்கும் என்று யூகம் கொள்ள முயல்வதால் நாம் அனைவரும் மனிதர்கள்.

இதில், மனது என்ற ஒன்று இயக்கம் கொள்ளத் துவங்கிய ஆரம்பப் புள்ளியிலேயே அதன் வெளிப்பாட்டு முறைகளும் அவற்றினை செறிவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமும் தோன்றிவிட்டது. விளைவாக சிந்தனை முறைகள் பிறந்தன. தத்துவமும் விஞ்ஞானமும் இருவேறு சிந்தனை முறைகள் ஆயின. சிந்தித்ததை செயல்படுத்த, பரிசீலிக்க, மறுதலிக்க, அதனை அனுபவமாக்கிப் பிறருடன் பகிர்ந்து கொள்ள, அவசியம் ஏற்பட்டது; கலைகள் தோன்றின. தத்துவத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் இடையே கிடந்து அலைந்த மனது தன் வாழ்வனுபவத்தின் தரிசனப் புள்ளிகளை அனுபவமாக சக மனதுக்குக் கடத்த முயல, அத்தகைய செயல்பாட்டிற்கு அது ஒலிகளைப் பயன் படுத்திய போது இசை பிறந்தது. கோடுகளை, வண்ணங்களைப் பயன்படுத்தியபோது அது ஓவியம் பிறந்தது. திடப்பொருளை வடிவமைப்பாக பயன் படுத்திய போது சிற்பம் பிறந்தது, மொழியைப் பயன்படுத்திய போது இலக்கியம் பிறந்தது, உடல் அசைவுகளை பயன்படுத்திய போது நடனம் பிறந்தது. ஒளியைப் பயன்படுத்தி அதை சேகரிக்கக் கற்ற போது புகைப்படக் கலை பிறந்தது, ஒளி, ஒலி ஆகியவற்றின் இணைப்பாக இவை அனைத்தையும் ஒருங்கினைக்கும் சாதனம் சாத்தியமென்ற நிலையில் சினிமா பிறந்தது.

சுருங்கச் சொன்னால், தான் கொண்ட மனதின் நுண்ணுணர்வு மூலம் பொதுவான மனித உணர்வுகளை ஆராய்ந்து அவற்றில் உயரங்களைத் தீண்டி, புதுப் புது திறப்புகளை உருவாக்கி, அதைப் பிறருக்கு அனுபவமாக மாற்றி விடும் திறன் கொண்டவனை நாம் கலைஞன் என்கிறோம். அத்தகைய திறன் வாய்ந்தவனின் செய்நேர்த்தியால் உருவாகும் படைப்பே கலை என்று அறியப்படுகிறது.



இதில், எல்லா உணர்வுகளையும் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ள பரிமாறிக் கொள்ள முடியுமா? ஒத்த அலைவரிசை இருந்தால் தானே பரிமாற்றம் சாத்தியம். ஒரு வீட்டின் கூடத்தில் 20 பேருக்கு மத்தியில் நாம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது நாம் நம் மனதின் ஆழங்களைத் திறந்து பேசி விடுவதில்லை, அனைவருக்கும் பொதுவான ஆர்வங்களையே பேசுகிறோம், பின் நாம் நமக்கு நெருக்கமானவராக கருதும் ஒரிருவருடன் தனிமை கொள்ளும்போதே ஆழமாக பேச முடிகிறது. இந்த இரு முறைகளே கலையிலும் சாத்தியமாகிறது. வெகு மக்களுக்குப் பொதுவாக இருக்கும் அம்சங்களை அவர்களின் ஆர்வத்திற்கேற்ப படைப்பைக் கொடுப்பவன் வெகு மக்களின் கலைஞனாகிப் பிரபலமடைகிறான். அதை தவிர்த்து தன் நுண்ணுணர்வின் முழுவீச்சில் நின்று, தன் அலைவரிசையை உள்வாங்கும் திறனுடனான மனங்களோடு மட்டும் உரையாடும் படைப்புகளை உருவாக்குபவன் பிரபலம் குறைந்த தீவிர கலைஞானகிறான்; ஆழமான அனுபவப் புள்ளிகளை முன்வைக்கும் அவனது கலை, மனித மனதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தேவையான காரணிகளை கொண்டிருப்பதால் தீவிரக் கலைஞன் முக்கியமான மனிதனாகிறான். உதாரணத்திற்கு, இன்றைய உலக அரங்கில் ஹாலிவுட்டின் ஸ்டீவன் ஸ்பீல்பர்கை வெகு மக்கள் கலைஞன் என்றும், ஈரானின் அபாஸ் கைரோஸ்டமியைத் தீவிரக் கலைஞன் என்றும் கொள்ளலாம். (குறிப்பு: இது உதாரணத்துக்காகச் சொல்லப்படுகிறதே தவிர ஸ்பீல் பர்க் எடுத்த ‘ஷின்ட்லர்ஸ் லிஸ்ட்,‘ ஆர்டிஃபீஷியல் இன்டெலிஜன்ஸ், எக்ஸ்ட்ரா டெரஸ்டிரியல் போன்ற படங்கள் வேறு தளத்தில் வைத்து மதிப்பிடப்பட வேண்டியவை என்ற கவனம் எனக்கு உண்டு என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறேன்).

கலையின் பாகுபாடுகள் இப்படியானதாக, பார்வையாளன்- படைப்பாளி இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் தேர்ந்து கொள்ளும் முறை சார்ந்து வீரியத் தன்மையுடன் அமைகிறதே தவிர, இதில் எங்கும் வணிகம் சார்ந்த கலை, வணிகம் சாராத கலை என்ற பிரிவினை இருப்பதாகத் தெரியவில்லை. தவிர, குறிப்பாக சினிமாவில், இரண்டில் எந்த வகைக் கலைஞன் என்றாலும் அவன் ஜீவித்திருக்க பொருளாதாரம் அவசியமானதே. அபாஸ் கைரோஸ்டமி எடுக்கும் படங்கள் உலகின் பல நுண்ணுணர்வு மிக்க மனங்களால் பார்க்கப்பட்டு விவாதிக்கப்படுவதாலே அவரால் தொடர்ந்து தன் படைப்புகளை உருவாக்கி திரையிட முடிகிறது.

தமிழ் சினிமாவில், துரதிர்ஷ்ட வசமாக, அனைவரின் அறிவுக்கும் எட்டும் பொது தன்மைகள் கொண்ட சிறப்பான கலை தோற்றம் கொள்ளாமலே போய் விட்டது; இங்கே ஸ்டீஃபன் ஸ்பீல் பர்க் போன்ற, அல்ஃப்ரட் ஹிட்ச் காக் போன்ற, அனைவருக்கும் சுவாரஸ்யமான ஒரு இயக்குனர் தோன்றவேயில்லை. அதற்குப் பதிலீடாக அனைவருக்கும் புரியக்கூடியது கேளிக்கை அம்சங்கள் மட்டுமே என்பதாகக் கொள்ளப் பட்டுவிட்டது. இந்த நிலையை இப்படிச் செய்ததில் பொது பார்வையாளனின் அரைவேக்காட்டுத்தனங்களும் தமிழ் இயக்குனர்கள் பார்வையாளனைப் பற்றியும் ஊடகத்தைப் பற்றியும் சரிவர புரிந்து கொள்ளாத தன்மையும் சம பங்கு வகிப்பதாகவே தோன்றுகிறது. இதனாலேயே, ‘வணிகப் படம்’ போன்ற அர்த்தமில்லாத வார்த்தைகள் உருக்கொள்கின்றன என்று நினைக்கிறேன். இதனால் விளைவது என, வணிக சினிமா என்பது வெறும் வார்த்தைப் பிரயோகமாக மட்டுமாக மட்டுமல்லாமல், அது ஒரு தனி வகையாகப் புரிந்துக் கொள்ளப்பட்டு அதற்கான சூத்திரங்களும் - என்னவென்று புரியாத நிலையிலேயே செல்லுபடி ஆகுமா இல்லையா என்ற உத்தரவாதம் கூட இல்லாமல் - உருவாக்கம் கொள்ளத் துவங்கிவிட்டன.

சில வருடங்களுக்கு முன் சினிமாக்காரராகும் முயற்சியிலிருந்த நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. பேச்சுக்கிடையில் நண்பர், "எனக்கு ஆர்ட் ஃபிலிம்ல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லீங்க, கமர்ஷியல் படம் எடுக்கனணும்" என்றார். நான், "இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?என்று கேட்டேன்.

சற்று யோசித்தவர், "ஒருத்தன் முதலில் சைக்கிளில் போறான், சைக்கிள் பஞ்சராயிடுது, பஞ்சரான சைக்கிளைத் தள்ளிக்கிட்டுப் போறான், அப்புடியே ஸ்லோவா படம் நகருது, இப்புடியெல்லாம் போட்டு மனுஷன அறுத்தெடுத்தா அது ஆர்ட் ஃபிலிம். இதுக்கு பதிலா ஸ்பீடா விடு விடுனு நகர்ந்தா அது கமர்ஷியல் படம்". என்றார். மொத்தத்தில் கலைப்படம் என்றால் மெதுவாக நகர்வது, வணிகப் படம் என்றால் வேகமாக நகர்வது என்பது அவர் கொண்டிருந்த புரிதல்.

நான் அவரிடம், "நீங்கள் சொன்ன உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம், ஒருவன் சைக்கிளில் போகிறான். சைக்கிள் பஞ்சராகி விடுகிறது. தள்ளிக் கொண்டு போகிறான், ஆனால், அந்தக் காட்சிக்கு முன்னதாக அவனது காதலி அவனுக்காகப் பேருந்து நிலயத்தில் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று காட்டப்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது படம் வேகமாக நகர்வதாக உணர்வீர்களா அல்லது மெதுவாக நகர்கிறது என்று நினைப்பீர்களா?" என்றேன்.

மெளனம்.

நான் தொடர்ந்து, "சரி, இன்னும் ஒரு படி மேலே சென்று இதே காட்சியை யோசித்துப் பார்ப்போம். அவனது காதலி அவனை நம்பி வீட்டை உதறிக் கிளம்பிச் செல்ல தயாராய் பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறாள், இருவரது குடும்பச் சூழலும் மோசமாக காதலுக்கு எதிரான நிலையிலிருக்கிறது. இருவீட்டாரும் அவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.அந்த நிலையில் நண்பனிடம் பணம் புரட்டச் சென்றவனுடைய சைக்கிள் பஞ்சராகி, அவன் விரைவு கொள்ள முடியாமல் போகிறதென்றால், படம் வேகமாக நகருமா? மெதுவாக நகருமா?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டேன்.

நண்பரிடம் பதில் இல்லை.

இப்படி ஏராளமான இளைஞர்கள், சினிமா பற்றிய குறைவுபட்ட புரிதல்களோடு, வணிகப் படம் என்று எதையோ எண்ணிக்கொண்டு, அதையே தங்கள் வாழ்க்கையின் இறுதி லட்சியமாக்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் அலைந்து அலைக்கழிகிறார்கள். வெற்றியாளர்களாக அறியப்படும் பல இயக்குனர்களுமே இதுபோன்ற புரிதல்களுடன் இயங்குவதும் அறியமுடிகிறது. இவர்களின் மொத்த புரிதலுமே வணிகப் படம் என்றால் பேர், புகழ், பெண்கள்(!) என்பதாகவும், கலைப்படம் என்றால் பார்வையாளனை அறுத்தெடுத்துக் கொன்று போட்டு விட்டு, விருது (விருது என்பது தமிழ்நாட்டில் அவ்வளவு மலிவானது அதுவே ‘ஆஸ்கர்’ என்றால் ஒஸ்தி!) வாங்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, தெருவில் உதவாக்கரையாகத் திரிவது, என்பதாக இருக்கிறது.

வணிகப் படம், கலைப் படம் என்ற பிரிவினை இப்படி என்றால், இதன் நீட்சியாக ‘மிடில் சினிமா’ என்றொரு புது வார்த்தையையும் உருவாக்கி சமீப காலமாக உருவாக்கிப் புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள். இந்த என்ற சொல்லின் அடிப்படியில் இன்னும் எத்தனை சூத்திரங்கள் உருவாகி, அதை நம்பி எத்தனை பேர் புறப்படக் காத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

இப்படி ஏதேதோ பெயரிட்டு தங்களுக்கான சினிமாவினைத் தேர்வு செய்பவர்களுக்கு ஒரு கேள்வி: சில வருடங்களுக்கு முன் ‘டைட்டானிக்’ என்றொரு படம் வெளிவந்து மொழி, இன, கலாச்சார எல்லைகளைத் தாண்டி உலக மக்கள் அனைவராலும் பார்க்கப் பட்டு கொண்டாடப்பட்டது. 11 ஆஸ்கர் விருதுகள் பெற்றது. சமீபத்தில் அதே இயக்குனர் இயக்கிய ‘அவதார்’ என்ற படம் பட்டித தொட்டிகளிலெல்லாம் ஓடிப் பொருள் ஈட்டியது. ‘டைட்டானிக்’, ‘அவதார்’, இவையெல்லாம் வணிகப் படங்களா? கலைப் படங்களா?

உங்கள் பதில் எதுவாக இருப்பினும் எந்த நிலை, எந்தச் சூழலை, எந்த காரணங்களால் எப்படிச் செய்தாலும், இறுதியில் கலையானது தன் இல்லாமை நிலையில் கூட தன் பாதிப்பை (எதிர்மறையாகவாவது) நிகழ்த்தியே தீரும். எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு சமூகத்தின் மக்கள் கலை உணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த சமூகம் மேம்படும் வாய்ப்பு ஏற்படுகிறது, மோசமான கலை ரசனை மோசமான சமூக அமைப்பிற்கே வழிவகுக்கும். இதற்கு மாற்று என்று ஒன்றிருக்க வழியில்லை. ஆதிப் புள்ளி முதல் சிந்தனையை கலை வழி மட்டுமே மீட்டி, அனுபவமாக்கி, சேகரித்து வந்துள்ள மனித மனதால் சட்டென்று ஒரு கலை சார்ந்த ஊடகத்தைக் கேளிக்கைக்குரிய சாதனம் என்று சொல்லித் துண்டித்துக் கொண்டுவிட முடியாது. இதற்கு, சினிமாவுக்கு எந்த ஒரு கலை மதிப்பையும் கொடுக்கத் தயாராக இல்லாத தேசத்தில் சினிமா சம்பந்தப்பட்டவர்களே ஆட்சியாளர்களாகிவரும், கிரிக்கெட் உட்பட சினிமாயின்றி எந்தத் துறையும் இயக்கம் கொள்ள முடியாமல் நீர்த்துப் போய் நிற்கும். நம் சமூகத்தின் இன்றைய நிலையே சாட்சி.

பொதுவானதொரு பார்வையாளன் சினிமா பார்ப்பது என்று முடிவு செய்து நேரத்தினை அதற்கு செலவிடத் துவங்கிவிட்டால், பின் அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவன் ரசிக்கும் விதத்திற்கு ஏற்றபடி அதன் பாதிப்பு அவன் மனதில் இருந்தே தீரும். காரணம், என்ன பெயரிட்டு நாம் அழைத்தாலும், ஒரு சில நொடிகள் ரசித்துப் பார்த்துவிட்டு விலகிக் கொள்ள சினிமா என்ற ஊடகம் எந்த நிலையிலும் முழுக்க முழுக்க வணிகம் சார்ந்த விளம்பரப் படம்
அல்ல.

ஆனந்த் அண்ணாமலை

Saturday, July 24, 2010

தபு சங்கர் கவிதைகள்

எனக்கு
லீப் வருடங்களைத்தான்
ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு.
***********************************
நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.
***********************************
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது....
"ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது?" என்று.
************************************
கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன்
வாசனையல்லவா வீசுகிறது.
*************************************
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்..
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
************************************
அன்று
நீ குடை விரித்ததற்காக
கோபித்துக் கொண்டு
நின்று விட்ட மழையைப்
பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழை
நின்றால் நீ எங்கோ
குடை விரிப்பதாகவே
நினைத்துக் கொள்கிறேன்.
**********************************

தபு சங்கர் கவிதைகள்

எனக்கு
லீப் வருடங்களைத்தான்
ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு.
***********************************
நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.
***********************************
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது....
"ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது?" என்று.
************************************
கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன்
வாசனையல்லவா வீசுகிறது.
*************************************
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்..
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
************************************
அன்று
நீ குடை விரித்ததற்காக
கோபித்துக் கொண்டு
நின்று விட்ட மழையைப்
பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழை
நின்றால் நீ எங்கோ
குடை விரிப்பதாகவே
நினைத்துக் கொள்கிறேன்.
**********************************

யார் பிள்ளை?

அந்த நாட்டு அரசனுக்கு எப்போதுமே ஒரு கவலை,என்னன்னா ஒரு முறை நகர்வலம் போனபோது இரண்டு பேர் பேசிட்டிருந்தத கேட்டான் .அதில் ஒருத்தன் "டே,இவன் என்ன ராஜாவோட புள்ளயா?பிச்சைக்காரன் பெத்த புள்ளதான"அப்படின்னு சொல்லிட்டான்.தான் உண்மையிலேயே ராஜா புள்ளதானா இல்லையா அப்படிங்கறதுதான் அவன் கவலை .
இது இப்படி இருக்க ,ஒருநாள் பக்கத்து ஊருக்கு தன் பரிவாரங்களோடு போய் தங்கி இருந்தபோது அவன் தங்கியிருந்த மண்டபத்தின் எதிரே உள்ள ஒரு படலில் வெள்ளரிக்காய் நிறைய காச்சிருந்தது.ராஜா ஒருத்தனைக் கூப்பிட்டு "அதுல ஒரு நாலு காயப் பறிச்சிட்டு வா ,சாப்பிடலாம் "னான்.அப்போ தெருவோரமா உக்காந்திருந்த ஒரு குருட்டு பிச்சைக்காரன் "ராஜா ! அந்த காய சாப்பிட வேணாம் கசக்கும்"னான்.அதுபடியே பறிச்சிட்டு வந்த காயும் கசப்பாத்தான் இருந்தது. ராஜா "நீ இந்த ஊரா"ன்னு கேட்டான்.அதுக்கு அவன் "இல்லை நான் இந்த ஊரு இல்லை வழிப்போக்கந்தான்"ன்னான். ராஜா ஆச்சரியப்பட்டு "பரவால்லயே !அப்புறம் எப்படி கண்டு புடிச்ச?நீயோ குருடன்.ஏற்கெனவே சாப்பிட்டு பாத்தியா?ன்னு கேட்டான். குருடன் சொன்னான்"இல்ல ,நான் சாப்பிடல.ஆனா இத்தனை ஜனம் வந்து போற கோவில் மண்டபம் இது ,இதுக்கு எதுத்தாப்புல ஒரு கொடில இத்தனை காய ஜனங்க சாப்புடாம விட்டு வெச்சுருப்பாங்களா ?அதான் சொன்னேன்"ன்னான்.ராஜாவும் சந்தோஷமாகி " நீ இனிமே எங்கயும் அலைய வேண்டாம்.இங்கயே தங்கிக்கலாம்.தினமும் உனக்கு கோவிலில் இருந்து ஒரு பட்டை சோறு கிடைக்கும்"அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டான்.
கொஞ்ச நாள் கழிச்சு ஒரு குதிரை விக்கறவன் ராஜாகிட்ட வந்தான்.குதிரையெல்லாம் காமிச்சு பேரம் பேசி முடிஞ்சதும் சொன்னான்"ராஜா !ஒரு சின்ன பந்தயம்.என்கிட்டே நாலு பெண் குதிரையும் அதோட குட்டிகளும் இருக்கு.தப்பில்லாம தாயையும் குட்டியையும் சரியா சேர்த்துட்டீங்கன்னா இந்த குதிரைக்கல்லாம் காசு வேணாம்"ன்னான்.ராஜா"இதென்ன பெரிய விஷயம்"ன்னுட்டு போய்ப் பாத்தா நாலு குதிரையும் அதோட குட்டிகளும் அச்சு அசலா ஒரே மாதிரி இருக்கு எந்த வித்தியாசமும் இல்ல .ராஜா ஒரு நிமிஷம் யோசிச்சு குட்டிகளை அவுத்து விடச் சொன்னார். குட்டிகள் தாய்க் குதிரைகள் கிட்ட போனதும் அதுகளுக்கே தெரியல அதோட அம்மா யாருன்னு.ராஜா "எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடு ,கண்டு பிடிக்கறேன் "ன்னு சொல்லிட்டு,மந்திரிகிட்ட வந்து "அன்னிக்கு கோவில் மண்டபத்துல பாத்தனே ,அந்த குருடனைக் கூட்டிட்டு வாங்க "ன்னான். அவன் வந்ததும் பிரச்சினையைச் சொல்லி என்ன பண்ணலாம்னான்.குருடன் "குட்டிக வேணும்னா திணறலாம்,ஆனா தாய்க்குத் தெரியும் குட்டி எதுன்னு,அதனால தாய்க் குதிரைகளை அவுத்து விடச் சொல்லுங்க"ன்னான்.அதே மாதிரி செய்து கண்டு பிடிச்சதும் ராஜா சந்தோஷமாகி "உனக்கு இனிமே ரெண்டு பட்டை சோறு தரச் சொல்றேன் சாப்பிடு"ன்னான்.
அப்போ ஒரு வைர வியாபாரி ராஜாவைப் பாக்க வந்தான்.அவனும் அதே மாதிரி எல்லாம் பேசி முடிஞ்சதும் "ராஜா!என்கிட்டே ஒரு அற்புதமான பெரிய வைரம் இருக்கு.அதைப் போலவே ஒரு கண்ணாடிக் கல்லும் இருக்கு எது அசல்னு கண்டு புடிங்க பாக்கலாம்"ன்னான்.வழக்கம் போல குருடன்கிட்ட கேட்டாரு ராஜா ,அவன் "ரெண்டையும் ஒரு அஞ்சு நிமிஷம் வெயில்ல வையுங்க ,கண்ணாடி சீக்கிரம் சூடாகும் ,வைரம் அப்படி ஆவாது"அப்படிங்க , ராஜாவும் அப்படியே செஞ்சு கண்டு பிடிச்சிட்டாரு.வழக்கம் போல சந்தோஷமா இன்னொரு பட்டை சோறு கொடுக்கச் சொல்லிட்டு,அவனை தனியா கூப்பிட்டுப் போயி தன் கவலையைச் சொல்லி ,தான் யாருன்னு கண்டு புடிக்க முடியுமான்னு கேட்டாரு.
அவன் கொஞ்சமும் யோசிக்காம "ராஜா ! நீ பிச்சைக்காரன் புள்ளதான்,ஏன்னா நான் எவ்வளவோ புத்திசாலித் தனமா உன் பிரச்சனையைத் தீத்து வெச்சேன்.இதே ராஜா பெத்த புள்ளன்னா பொன்னையோ பொருளையோ கொடுப்பான்.ஆனா உன் புத்தி சோத்து மேலதான் இருந்தது,அத தாண்டி உன்னால யோசிக்க முடில பாத்தியா?"ன்னான்
முல்லா ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் சென்றார்.அது ஒரு கப்பலில் உள்ள வேலை.முன் அனுபவம் எதுவும் இல்லாத முல்லாவைப் பார்த்து அந்த முதலாளி எரிச்சலுடன் கேள்வி கேட்க ஆரம்பித்தார்."நீ கப்பலில் சென்று கொண்டிருக்கிறாய்,அப்போது பெரிய அலை ஒன்று வருகிறது,உதவிக்கோ அங்கு யாருமில்லை .என்ன செய்வாய்?"என்றார்.முல்லா சிறிதும் யோசிக்காமல்"கப்பலில் உள்ள கனமான நங்கூரத்தை எடுத்து வெளியில் போடுவேன்"என்றார்."இன்னுமொரு மிகப்பெரிய அலை வருகிறது!அப்போது?".முல்லா"மீண்டும் அதிக கனத்தை வெளியில் இறக்குவேன்"என்றார்."மீண்டும் அதை விடப் பெரிய அலை ஒன்று வந்தால்.."முல்லா"மீண்டும் அதிக கனமான பொருளை கப்பலில் இருந்து தொங்க விடுவேன்"என்றார்.எரிச்சலான முதலாளி "அந்த கனமான பொருள்களை எங்கிருந்து பெறுவாய்?"என்றார்.முல்லா அமைதியாக "நீங்கள் அந்த அலைகளை எங்கிருந்து பெறுவீர்கள்? என்றார்.

Saturday, July 3, 2010

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் - ஊழ்விதி கவிதை -30

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++++++++++++++++

ஊழ்விதி

+++++++++++++++++++++++++++++++++

"உன் தேசத்தின் ஊழ்விதியும் என் தேசத்தின் ஊழ்விதியும் இனி எவ்விதம் இருக்கும் ? எந்தப் பூத வேந்தன் பரிதிக்கு முன்னால் நாம் பிறந்து வளர்ந்து நம்மை ஆடவர் மாதராய் ஆளாக்கிய குன்றுகளையும், சமவெளிகளையும் ஆக்கிரமிப்பான் ? புதிய யுகம் ஒன்று காலையில் புலர்ந்து லெபனான் சிகரத்தின் மீது தோன்றுமா ? ஏகாந்தனாய் உள்ள ஒவ்வொரு சமயத்திலும் நான் இந்த வினாக்களை என் ஆத்மாவிடம் கேட்கிறேன். ஆனால் ஊழ்விதி அதிபனைப் போல் என் ஆத்மா ஊமையாக இருக்கிறது."

கலில் கிப்ரான். (The Giants)

++++++++++++++++++++++++

<< ஊழ்விதி >>

++++++++++++++++++++++++

இராப் பகலாகச் சிந்திக் காதவர்

எவர் உங்களில் இருக்கிறார்

போதை ஏறிய

பூத மன்னர் ஆட்சியில்

விதவைகள் கண்ணீரும்

அனாதைகள் அழுதிடும் நீரும்

விழுந்திடும்

உலகத்து ஊழ் விதியை

ஒரு பொழு தேனும் எண்ணாமல் ?

பரிணாம விதியை நம்புவோரில்

ஒருவன் நானும் !

பூரண விடுதலைப் புரட்சிகள்

கோர மாந்தரால்

உதித்தெழும் என்று

நம்புவோன் நான் !

மதங்களும் அரசாங் கமும்

உன்னத பீடத்துக் குயரும் என்று

நம்புவோன் நான் !

+++++++++

எனைச் சுற்றி இருப்பவர்

அனைவரும்

பூதங்கள் உதிப்பதைக் காணும்

குள்ளர்கள் !

தவளைகள் போல்

கத்துவார் இந்தக் குள்ளர் !

இவ்வுலகம் காட்டு மிராண்டிகள்

இருப்பிட மாய்த்

திருப்பி வந்துள்ளது !

விஞ்ஞானக் கல்வி படைத்தவை எல்லாம்

இந்தப் புது ஆதி வாசிகளால்

அந்த மாகி அழிந்தன !

கற்காலத்துக் குகை வாசிகளாய்

தற்போது மாறி விட்டோம் !

நாம் படைத்த

நாச எந்திரங்களும்

நுணுக்கத் தொழிற்துறைக்

கொலைக் கருவிகளும்

மினுப்பதைத் தவிர

நம்மைத்

தனித்துக் காட்டு வதில்லை !

++++++++++++

மேற்கிசை : மாஹ்லர்

Adagietto என்பது மெதுவாக செல்லக்கூடிய இசைக்கான (இத்தாலிய) இசைச் சொல்.இதைப்போல இசையின் meter என்று சொல்லக்கூடிய வேகத்தை குறிக்க பல சொற்கள் ஐரோப்பா இசையில் உள்ளது. நம் கர்நாடக இசையின் தாளம் என்ற பிரயோகத்தை இதனுடன் ஓரளவு ஒப்பிடலாம். ஆனாலும் இவை இரண்டும் வெவ்வேறு வகைப்பட்டவை.
எல்லா இசையையும் தாளத்தால் பிரிக்க முடியும். சாதாரணமாக நாம் தாளம் போடுவதால் இந்த ஒலியை பல சிறிய பகுதிகளாக பிரிக்கிறோம். இந்த பகுதிகள் ஒரே அளவில் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.அப்படி பிரிக்கப்பட்ட இசை குறியீட்டு முறையால் தொகுக்க முடியும். இதை Musical Notation(இசை குறியீடு) என்பார்கள். நேர முறைப்படி பிரிக்கப்படும் இசை பல bars என வகுக்கப்படும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள Mahler ஒத்திசைவு (Symphony) Number 5 (Death in Venice) உபயோகப்படுத்தியிருக்கும் Adagietto மெதுவான இசை. இதனாலேயே அதன் அடிநாதமும் சோகமாக நமக்கு ஒலிக்கும்.இதை 1900களில் கேட்ட அனைவரும் இருபதாம் நூற்றாண்டின் உலகப்போர்/அழிவு ஆகியவற்றை மாஹ்லர் கணித்ததாக நினைத்தனர்.
இதனாலேயே இந்த ஒத்திசைவை இருபதாம் நூற்றாண்டின் பிரதிபலிப்பு எனக் குறிப்பிடுகிறார்கள்.மெதுவாக தொடங்கும் இசை, தாளவாத்தியங்களினால் ராணுவ அணிவகுப்பின் சத்தத்தையும், அதைத் தொடரும் வயலின்/செல்லோ இசை அழிவையும் குறிப்பிடுவதாகும்.முடிவில் வரும் பல வாத்திய இசை dissonance effect உருவாக்குவதால் avant-garde இசைக்கும் தந்தை என இதை கருதுகிறார்கள். Avant-garde என்பது வழமையான கலை கூறுகளை உடைத்து , புது பாணியை ஆராயும் நிலை எனக் கூறலாம். Pointilism ஓவியத்திற்கான avant garde ஆரம்பம். அதேபோல தானியங்கி இசை, கணித முறைப்படி கட்டப்பட்ட serialism இவை ஆரம்ப கூறுகளை இந்த ஒத்திசைவிலிருந்தே பெற்றன.

கராத்தே கிட்

அசராம அடிப்பதுதான் ஜாக்கிசான் ஸ்டைல். கராத்தே கிட் படத்தில் அசராமல் நடித்திருக்கிறார் ஜாக்கி! கடைசியாக வெளியான போலீஸ் ஸ்டோரியிலேயே அழுது புரண்டிருந்தாலும்.. கராத்தே கிட்டில் அமைதியாக ஆர்பாட்டமில்லாமல் நடித்திருக்கிறார். அமைதியான சீனர்களுக்கேயான கிழட்டு நடை! புன்னைகையில்லாத அமைதியான முகபாவம்.. இத்தனைவருடமாக ஜாக்கியை ஹாலிவுட்டும் சீனர்களும் விரட்டி விரட்டி சண்டையே போட வைத்துவிட்டனர். இந்த படத்தில் ஒரே ஒரு சண்டைதான் அதுவும் மிகமிக மிருதுவான வன்முறையில்லாத சண்டை!
ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். (அங்கேயும் வாரிசுகள் தொல்லைதானா!.. தந்தை மகனுக்காற்றும் உதவி!) சின்ன பையன்தான் ஆனால் சிறுத்தைக்குட்டி!. அம்மாவிடம் நாம ஊருக்கே போயிரலாம்மா! என்று அழும் போதும்.. கிளைமாக்ஸில் உடைந்த காலோடு சண்டையிடும் போதும் உழைப்பு தெரிகிறது. படத்தின் நாயகனின் அம்மாவாக வரும் தாராஜி ஹன்சன். சில காட்சிகளிலேயே தோன்றினாலும் கவர்கிறார்.
படம் முழுக்க சீனாவிலேயே படமாக்கப்பட்டிருந்தாலும் , கம்யூனிச சீனாவிற்கு எதிராக எடுக்கப்பட்டதோ என்று நினைக்கவைக்கிறது படம் சொல்லும் செய்தி மற்றும் அதன் அரசியல்! பழமைவாதியான ஜாக்கி குங்பூ எனும் ஆயுதத்தை சமாதானத்திற்கான கலையாகவும், தற்கால குருவான வில்லன் குங்பூ எதிரிகளை சாகும்வரை அழிக்கவும் பயன்படுத்துவாக சித்தரிக்கப்படுகிறது. சீனர்களை அமெரிக்க நாட்டின் கருப்பின சிறுவன் தோற்கடிக்கிறான்! இப்படி படம் முழுக்க நிறைய சின்ன சின்ன அரசியல் இருந்தாலும்.. படத்தை தயாரித்திருப்பது ஒரு அமெரிக்க நாட்டின் பிரஜை! அதனால் அதற்கு மேல் எதையும் எதிர்பார்க்க முடியாது! படம் முழுக்க முழுக்க ஒரு மாதிரி அழுக்காகவே எடுக்கப்பட்டுள்ளதும் சீன நகரங்களை நெருக்கடியாகவும் சீனர்களை வெறிபிடித்தவர்களாகவும் காட்டுவது நெருடல்.
குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும்.. படம் முழுக்க வன்முறை நிறைந்திருக்கிறது. தியேட்டரில் நிறைய குட்டீஸ்களைக் காண முடிந்தது. என்ன செய்ய? வேறு வழியில்லை, நம்மூர் சுறாக்களுக்கும் சிங்கத்துக்கும் குட்டிப்பிசாசுகளுக்கும் இந்த வன்முறைகள் குறைவுதான். சொல்லப்போனால் குழந்தைகள் மனதில் தைரியத்தை விதைக்கலாம். சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் , குங்பூ பயிற்சிக்காக ஜாக்கி அந்த சிறுவனை அழைத்துச் செல்லும் மலைகள் நிறைய புத்தக்கோயில்களும் பிரமிப்பு!
பயிற்சிக்காக ஆர்வத்தோடு வருகிற சிறுவனை விடாமல் அவனுடைய சட்டையை கழட்டி மாட்ட செய்வது.. அதைப்பற்றி தியேட்டரிலேயே பாருங்கள்.. ஒரு குட்டி ஜென் கதை பார்த்த திருப்தியை அளிக்கிறது கராத்தேகிட் திரைப்படம்! படம் பார்த்து முடிக்கும் போது குஷியான மூட் மனதிற்குள் நிரம்பி விடுகிறது. ஜாக்கிசானின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் ஜேடன் ஸ்மித் அந்த குறையை தன்னுடைய அபாரமான நடிப்பால் போக்குகிறார்.
படத்தில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று டப்பிங்! சிம்பிள் மற்றும் பளிச் வசனங்கள். சில வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. முடிந்தவரைக்கும் படத்தை தமிழ் டப்பிங்கில் பார்ப்பது உசிதம்!
1984களில் வெளியான கராத்தே கிட் என்னும் படத்தின் ரீமேக் இது. இந்த படத்தை வில் ஸ்மித் தயாரித்துள்ளார். ஜாலியாக இரண்டு மணிநேரம் பார்க்க கூடிய நல்ல விறுவிறு சுருசுரு குங்பூ படம்

Sunday, June 20, 2010

சுஜாதா:நம் காலத்து நாயகன் ( 1935-2008 ) by manushyaputhiran

பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் பிப்ரவரி 29ஆம் தேதி வெயில் தகித்த ஒரு மதியத்தில் சுஜாதா ஒரு பிடி சாம்பலாக மாறினார். மயானத் தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த என்னிடம் யாரோ ஒரு உறவினர் சுஜாதா மீது போடப்பட்ட நாணயங்களில் இருந்து ஒரு இரண்டு ரூபாய் நாண யத்தைக் கொடுத்து 'நினைவாக வைத்துக்கொள் ளுங்கள்' என்று கொடுத்தார்.

சுஜாதா 90களின் ஆரம்பத்தில் இருந்து இந்த 17 ஆண்டுகளில் எனக் குக் கொடுத்தவைகளை லௌகீகக் கணக்குகளால் அளவிடுவது கடினம். இப்போது அவரிடம் இருந்து கிடைத்த அந்த இரண்டு ரூபாய் நாணயம் ஒரு இரும்புக் குண்டாகிக் கனத்துக் கொண்டிருக்கிறது. ஒருபோதும் தொலைக்கவோ செலவழிக்கவோ கை மறதியாய் வைக்கவோ முடியாத நாணயம்.
புற உலகிற்கான பாதைகள் மூடப்பட்டு எனது வெளிச்சக் குறைவான அறையின் சொற்களால் ஆன ரகசிய வழிகளைக் கண்டுபிடித்து வெளியேற நான் தத்தளித்துக்கொண்டிருந்த காலம் அது. எங்கள் கிராமத்து நூலகத்தில் குமரி பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் நூல்கள் என் அலுப்பூட் டும் பொழுதுகளில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின. நைலான் கயிறும், 24 ரூபாய் தீவுகளும், கொலை யுதிர் காலமும் வழியே உருவாக்கிய மொழியின் சாகசங்கள் பெரும் பரவசத்தை ஏற்படுத்தின. 'அவள் புன்னகை மட்டும் அணிந்திருந்தாள்' என்பது போன்ற ஆயிரக்கணக்கான குதூகலமும் பொறியமைவும் கொண்ட நூதனமான வாக்கியங் கள் நான் அறிந்த மொழி பழக்கங்கள் அனைத்தை யும் கலைக்கத் தொடங்கின. வாசிப்பின் இன் பத்தை சுஜாதா அளவுக்கு உருவாக்கிய ஒரு எழுத் தாளன் தமிழில் இல்லை என்பதை இப்போது தர்க்க பூர்வமாக நிறுவ முடியும். ஆனால் அந்த இளம் வயதில் அவர் மொழியை ஒரு தூண்டி லைப் போலப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறியவில்லை. தொடர்ந்து அந்தத் தூண்டிலை நோக்கிச் சென்றுகொண்டே இருந்தேன். பின்னர் அவரே தூண்டில் கதைகள் என்ற ஒரு தனித்த கதை வரிசையையும் எழுதினார்.
கோவை ஞானி, நிகழ் இதழில் எனது கவிதைகளை 90களின் ஆரம்பத்தில் வெளியிட்டு உற்சாகமூட்டிய சமயம் அது. 'கால்களின் ஆல்பம்' அப்போதுதான் நிகழில் வெளிவந்திருந்தது. கோவையில் நடந்த ஒரு சிறுகதைப் பயிலரங்கில் அந்தக் கவிதையை வாசித்த சுஜாதா, அதற்குப் பார்வையாளர்கள் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான எதிர்வினை குறித்து பலமுறை வெவ்வேறு இதழ்களில் எழுதினார். மேடைகளில் பேசினார். எந்த அடையாளமும் அற்ற ஒரு இளம் கவிஞனின் ஒரு கவிதை குறித்து சுஜாதா போன்ற ஒரு நட்சத்திர எழுத்தாளர் காட்டிய இந்த உற்சாகம் அவனுக்கு அந்த வயதில் அளிக்கக்கூடிய தன்னம்பிக்கையையும் சக்தியையும் விவரிப்பது கடினம். ஒரு முறை தற்செயலாக தூர் தர்ஷன் பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் 'அம்மா இல்லாத முதல் ரம்ஜான்' கவிதையை அவர் வாசித்துக்கொண்டிருப்பதைக் கேட்டு என் வீட்டில் அனைவரும் அதிர்ந்தனர். அவருக்கு நன்றி தெரிவித்து முதன்முதலாக ஒரு சிறிய கடிதம் எழுதி னேன். ஒரு போஸ்ட் கார்டில் பதில் எழுதினார், 'உங்களுக்குப் பிடித்த கவிஞர்களின் கவிதைகளை எனக்கு அனுப்புங்கள். நான் அவற்றை வாசகர் களுக்கு அறிமுகம் செய்கிறேன்' என்று. நான் ஒரு நோட்டுப் புத்தகத்தில் அப்போது என்னை ஆக்கிர மித்துக்கொண்டிருந்த நகுலன், பிரமிள், தேவதேவன், சுகுமாரன், கல்யாண்ஜி, ஆத்மாநாம், சுயம்புலிங்கம் என பலரது கவிதைகளையும் அவ ருக்கு அனுப்பினேன். அடுத்தவாரமே இந்த நோட் டுப் புத்தகம் பற்றிய குறிப்புடன் சுயம்புலிங்கத்தின் 'தீட்டுக் கறை படிந்த பூ அழிந்த சேலைகள்' கவிதை பற்றி குமுதத்தில் எழுதினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் 'நீ அனுப்பிய நோட்டுப் புத்தகத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்' என்றார். அவர் வாசிப்பில் காட்டிய மூர்க்கமான, தளர்ச்சியற்ற ஈடுபாடு அபூர்வமானது. எப்போதும் ஒரு வாசகனாகவும் ரசிகனாகவும் தன்னை வைத்திருப்பதில் அவர் சளைக்கவே இல்லை. சமீப காலம்வரை அவரைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் தனக்கு அனுப்பப்பட்ட ஏதாவது ஒரு கவிதைத் தொகுப்பை எடுத்துக்கொண்டு வருவார். 'இந்தத் தொகுப்பில் 37ஆம் பக்கத்தில் உள்ள கடைசி இரண்டு வரிகள் மட்டும்தான் கவிதை' என்பார். அவருக்கு கவிதை வரி களைக் கண்டுபிடிப்பதில் விநோதமான ஒரு மோப்பசக்தி செயல்பட்டது. பல சமயங்களில் அவர் நினைவிலிருந்து மேற்கோள் காட்டும் வரிகள் அதன் மூலத்திலிருந்து வெகுவாக விலகியும் சுருக்கப்பட்டும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். வாக்கியங்களின் மிகையான, சுமையான சொற்களைக் களையாமல் அவரால் அவற்றை நினைவில் நிறுத்த முடியாது. மொழி குறித்த இந்தக் கறாரான நுட்பமான அணுகுமுறையே அவரது எழுத்துகளை நவீனத் தமிழின் நிர்ணய சக்தியாகவும் மாற்றியது.
சுபமங்களா நாடக விழாவிற்காக சுஜாதா மதுரைக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்து அங்கு போனேன். முதல் நாளே அவர் உரை முடிந்து விட்டிருந்தது. அவரைச் சந்திக்க வரலாமா என்று ஒரு நண்பர் மூலம் கேட்டு அனுப்பினேன். 'சிரமம் வேண்டியதில்லை, நானே வந்து பார்க்கிறேன்' என்று நேராக விழா மண்டபத்திற்கு வந்துவிட்டார். அன்றைக்கு அவரைப் பொறுத்தவரை ஒரே ஒரு கவிதை மூலம் அறியப்பட்ட நபர். ஆனால் அவருக்கு அது போதுமானதாக இருந்தது. சில நிமிடங்களில் அவரைப் பலரும் சூழ்ந்துகொண்டனர். அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன் என்பதைவிட பார்த்துக்கொண்டிருந்தேன்.
சென்னைக்கு வந்தபிறகு அவரை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன. பின்னர் கனிமொழி மற்றும் அவரது கணவர் அரவிந்தனின் நட்பு கிடைத்தபோது எங்கள் மூவருக்கும் பொதுவான ஒரு நண்பராக, மையமாக சுஜாதா மாறினார். 2002ஆம் ஆண்டு துவக்கத்தில் கடும் மன அழுத்தம் என்னை சூழ்ந்தது. அதுவரையிலான எனது உறவுகள் அவை சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தும் கலைந்து நான் எனது தனிமையின் மயான வெளிகளுக்கு திரும்பிவிட்டிருந்த காலம். உடைந்த மனோரதங்களுடன் வாரம் ஒரு முறை எனது மனநல மருத்துவர் டாக்டர் மோகன்ராஜை சந்திப்பேன். எனது பிரச்சினைகளுக்கான காரணத்தை முற்றாக மறைத்து தொடர்ந்து அவரிடம் பொய் களையும் குழப்பமூட்டும் தெளிவற்ற வாக்கியங்களையும் கூறிக்கொண்டிருந்தேன். நெஞ்சைப் பிசையும் இரும்புக் கரங்களிலிருந்து என்னை விடுவியுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன். அவர் எனக்கு மருந்துகளைக் கொடுத்தார். அவை தூக்கத்தைக் கொண்டுவந்தன. நெஞ்சின் ஆழத்தில் கொந்தளிக் கும் கடல்கள் தூங்க மறுத்தன. அந்தக் காலகட்டத் தில்தான் சுஜாதா அபாயகரமான நிலையில் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு மரணத்தின் எல்லை வரை சென்று மீண்டிருந்தார். அவரைத் திரும்பத் திரும்ப போய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனது பனி எங்கோ உருகத் தொடங்கியது. அவருடைய புத்தகங்கள் சிலவற்றைப் பதிப்பிக்கும் அனுமதியை வழங்கினார். அது ஒரு துவக்கம். எனது துயரத்தின் இருள் படிந்த முகம் கண்ணாடியில் வேறுவிதமாக மாறத் தொடங்கியது. எனக்குத் தேவை மருந்துகள் அல்ல செயல்பாடுகள் என்பதை சுஜாதா எனக்குப் புரிய வைத்தார். மிக நெருக்கடியான சந்தர்ப்பங்கள் வந்தன. அவர் மிகுந்த உறுதி யுடன் என்னை ஆதரித்தார். நான் தவறு செய்த சந்தர்ப்பங்களில்கூட அவர் என்னை விட்டுக் கொடுக்கவில்லை. என் வாழ்நாளில் நான் ஒரு போதும் அந்த சந்தர்ப்பங்களை பதிவு செய்யப் போவதில்லை. அவை அந்தரங்கத்தின் வலி மிகுந்தவை. சுஜாதா என் மனதின் ஆழத்தில் இருந்த இருள் முடிச்சுகளை அவிழ்த்தார். அன்பின் வெளிப்படையான உணர்ச்சிகளை அவர் ஒருபோதும் காட்டியவரல்ல. நான் மனம் உடைந்த சந்தர்ப்பங்களில் அவர் ஒரு ஆறுதலோ மறு மொழியோ சொல்ல மாட்டார். மாறாக சில புதிய திட்டங்களைக் கொடுப்பார். அதுவரையிலான துயரத்தின் வாசனை நீங்கிச் சென்றுவிடும்.
உயிர்மை, சுஜாதாவின் புத்தகங்களின் மிகச் சிறந்த பதிப்புகளைக் கொண்டுவந்தது. நண்பர் தேசிகனின் உதவியுடன் அவரது சிறுகதைகள், குறுநாவல் கள், நாடகங்கள் அனைத்தையும் வகைப்படுத்தி தொகை நூல்களாகக் கொண்டுவந்தோம். சிதறிக் கிடந்த அவரது எழுத்துகள் இவ்வாறு தொகுக்கப் பட்டதன் வழியாக சுஜாதாவின் படைப்பின் ஆளுமை துல்லியமாக வெளிச்சம் பெற்றது. உண்மையில் ஊடகங்கள் வழியாக அறியப்படும் பொது முகம் அல்ல சுஜாதாவினுடையது. அவரது எழுத்துகள் தமிழ் எழுத்து முறையின் திசை வழியையே முற்றாக மாற்றி அமைத்தன. தமிழ்ப் புனைகதை மொழியையும் உரைநடை முறையையும் சுஜாதா ஒரு இயக்கமாக செயல்பட்டு மாற்றியதற்கு சாட்சியம் இந்தத் தொகை நூல்கள்.
கடந்த சில ஆண்டுகளில் நான் கவிதைகள் எழுதுவது குறைந்து போனது பற்றி அவர் என்னிடம் திரும்பத் திரும்ப பேசினார். 'உனது தொழில் உன் எழுத்துகளை கொன்றுவிடக் கூடாது' என்றார். இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாசகர்களுக்குக் கையெழுத்திட்டுக்கொண்டிருந்த இடைவெளியில் 'சார் உங்கள் கடைசி பக்கத்தை உயிர்மையில் ஆரம்பிக்கிறீர்களா?' என்று கேட்டேன். 'எழுதுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை, நீயும் தொடர்ந்து ஏதாவது எழுதுவதாக இருந்தால் நானும் எழுதுகிறேன்' என்றார்.
அவர் நோய்மையின் துர்க்கரங்களிலிருந்து பல முறை வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறார். இந்த முறை அது நிமோனியாவின் ரூபத்தில் வந்தது. ஒன்றரை மாதங்கள் மருத்துவமனைக்கும் வீட்டிற்குமான போராட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9.22க்கு முடிவுக்கு வந்தது. செயற்கை சுவாசத்தில் ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவரது உடல் ஒரு கொடுங்கனவாக மாறியது. ஒருபோதும் கடக்க முடியாத கொடுங்கனவு அது.
சுஜாதா இந்த நூற்றாண்டில் தமிழ் அடைந்த நவீனத்துவத்தின் மாபெரும் மைய நீரோட்டம். அதில் கால் வைக்காமல் படைப்பின் சவால்களை மொழியின் சவால்களை ஒருவர் கடப்பது மிகவும் கடினம்.
எமது எல்லாச் செயல்பாடுகளிலும் சுஜாதாவின் சொல்லின் வலிமையும் அன்பின் நிழலும் படிந்திருக்கிறது. உயிர்மை குடும்பத்தினர் அவரது நினைவு களை நெஞ்சில் ஏந்துகின்றனர்.

( நன்றி: உயிர்மை மார்ச் 2008 )

பிராந்தியவாதமும் ஐ.பி.எல்.லின் கலப்புமணமும்

வினோத பார்வையாளர்கள்

முதல் ஐ.பி.எல். ஆரம்பிக்கும் முன் அதன் செய்தியைச் சொல்லும் விதம், அறிமுகமான விளம்பரங்கள், ரசிகர்களின் பிராந்திய அடிப்படையிலான போட்டி மனப்பான்மையை முன்வைப்பதாக இருந்தன. ஐ.பி.எல். தன் வளர்ச்சிப்படிகளைக் கடந்த பின் அத்தகைய விளம்பரப் போக்கு கைவிடப்பட்டது. ஐ.பி.எல். அனைத்து தள மக்களுக்குமான ஒரு கேளிக்கையாக அறைகூவப்படுகிறது. ஐ.பி.எல். மூன்றாவது நாளில் சென்னை Vs டெக்கான் ஆட்டம் சென்னையில் நடந்தது. இப்போட்டியில் சென்னை ஆரம்பம் முதலே ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருந்தது. பொதுவாக தாயக அணியின் ஆட்டம் தோல்வியை நோக்கிச் செல்லும் போது உள்ளூர் விசிறிகள் மிக அமைதியாக அதிருப்தி காட்டுவார்கள். ஆனால் இந்த ஐ.பி.எல். ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்கள் முடிந்த வரை கொண்டாடிவிடும் மனநிலையில்தான் இருந்தனர். தொடர்ச்சியான சலசலப்பும் தாவலும் கைத்தட்டலும் சொந்த ஊர் அணியின் நிச்சய தோல்வி தெரிந்து விட்ட பின்னரான ஜீவனில்லா ஓவர்களிலும் தொடர்ந்தது. இவர்கள் சற்று வினோதமான பார்வையாளர்கள்.

இந்தியா ஆடுவதற்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடுவதற்கும் இடையிலான வித்தியாசத்தை ஐ.பி.எல். விசிறிகள் தெளிவாக வரையறுத்து வைத்துள்ளார்கள். சர்வதேச ஆட்ட பார்வையாளர்களுக்கும் ஐ.பி.எல். விசிறிகளுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. ‘இந்திய’ ரசிகர்கள் சர்வதேச தோல்வியைத் தமது வீழ்ச்சியாக நினைக்கும்படி ஒன்றிப்போகும் மேலோட்ட தேசியவாத உணர்வு கொண்டவர்கள். கணிசமாக ஆண்கள். தேசிய அணிக்கு உணர்ச்சிகரமான ஆதரவை ஆண்டாண்டு காலமாய் வெளிப்படுத்தி வந்துள்ள விசுவாசிகள். ஐ.பி.எல். இந்த விசுவாசத்தை சிதைக்கிறது. ஒட்டுமொத்தமான ஒரு இந்தியத் தன்மை ஐ.பி.எல். பாணி கிரிக்கெட்டில் உண்டு. என்றாலும் இரு காரணங்களால் அது எவ்விதமான உள்ளூர் விசுவாசத்தையும் இல்லாமலாக்குகிறது.



ஐ.பி.எல்.லும் இன்றைய தலைமுறையின் மிதவை மனநிலையும்

ஐ.பி.எல்.லில் நாம் காணும் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இன்றைய கேளிக்கை கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்கள் மேற்தட்டவர். மாநில அடையாளத்தைப் பொருட்படுத்தாத மாநகர நுனி ஆங்கில மாநகரவாசிகள். சமகால வாழ்வின் பலதரப்பட்ட தேவைகளை நிறை வேற்றும் அவசரத்தில் அவர்களுக்கு இத்தகைய தொடர்ச்சியாக ஆடப்பட்டு நிகழ்காலத்தின் வேகத்துக்கு உடன்பட்டு உடனடியாக மறந்து விடக்கூடிய வகைமையிலான T20 தோதானதாக உள்ளது. சமகால கார்ப்பரேட் கலாச்சாரத்தில் பெரும்பாலான உறவுகளின் சாரம் அன்பு அல்ல, அனுகூலமான தொடர்பு வலை மட்டுமே. அது போலவே ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அடிப்படை கிரிக்கெட் அல்ல, கேளிக்கை - ஆதரிக்கும் அணியின் அடையாளத்தில் இருந்து அதன் வெற்றி - தோல்விகள் வரை மறந்துவிட ஊக்குவிக்கும் மூட்டமான கேளிக்கை.





மேலோட்ட அடையாளங்கள், அனுகூலங்கள்

அடுத்து ஐ.பி.எல். போன்ற தொடர்களில் மாநிலப் பெயர்களிலான அணிகள் ஆடினாலும் அந்த பிராந்திய கிரிக்கெட்டின் ஆளுமையை அவை கொண்டிருப்பதில்லை. எட்டு ஐ.பி.எல். அணிகளுக்கும் வெற்றியை அமைப்பவர்கள் உள்ளூர் வீரர்கள் என்பது நாம் அறிந்ததே. சர்வதேசர்கள் வெற்றிப்போக்கில் பாதிப்பை ஏற்படுத்துபவர்கள்; திசைகாட்டிகள். பல்லக்கைத் தூக்கிச் செல்லும் கால்கள் உள்ளூர் வீரர்களுடையவை. பல்வேறு பிரதேசங்களின் சிறந்த உள்ளூர் ஆட்டக்காரர்களைத் தன் அணியில் ஒன்று திரட்டி உள்ள அணிகள் இதுவரை நன்றாக ஆடியுள்ளன. ஏனெனில் தம் சொந்த பிராந்திய அணியில் இடம் பெற்று சோபித்துள்ள ஆட்டக்காரர்கள் ஓஜா மற்றும் பாண்டே போன்று மிகச் சிலரே. இந்தக் கலப்பு அடையாளம் ஐ.பி.எல்.லுக்கு எதிர்பாராமையையும் அதிரடித் தன்மையையும் வழங்கி உள்ளது. உதாரணமாக, இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த மாநில அணி மும்பை. அதிகமுறை ரஞ்சி தொடர் கோப்பையைக் கைப்பற்றி உள்ளது மும்பை தான். ஐ.பி.எல்.லில் மும்பை அணி வெளிநாட்டவரின் இறக்குமதி இன்றி அப்படியே மும்பை இந்தியர்களாக ஆடியிருந்தாலும் சிறப்பாகப் போராடியிருக்கும். ஒருவேளை கணிசமான வெற்றிகளையும் பெற்றிருக்கும். ஆனால் முதல் இரு ஐ.பி.எல்.களில் அகர்கர், பவார், ஜாபர், ரோஹித், சஹீர் உள்ளிட்ட வீரர்கள் வேறுபல அணிகளுக்காக ஆடினர். மூன்றாவது ஐ.பி.எல்.லில் மும்பை அணி தனது பிராந்திய சாராம்சத்தை முழுக்க இழந்து பிற மாநில அணி வீரர்களைப் பிரதானப்படுத்தி நிற்கிறது. சுவாரஸ்யமாக இப்படித் தன் பிராந்திய அடையாளத்தை துறந்துள்ளது அவ்வணியை வலுப்படுத்தி உள்ளது. தற்போது ரெஹானே, நாயர் மற்றும் குல்கர்னியைத் தவிர மும்பை அணியின் அசலான வீரர்கள் வெவ்வேறு ஐ.பி.எல். அணிகளில் ஆடி வருகின்றனர். ஐ.பி.எல் 2010-இன் முதல் ஆட்டத்தில் இம்மூவரும் பங்கேற்கவில்லை. சர்வதேசர்களோ உள்ளூர்க்காரர்களோ அல்ல, ஹைதராபாதின் ராயுடு, ஜார்க்கண்டின் சவுரப் திவாரி மற்றும் தமிழகத்தின் சதீஷ் ஆகியோர் தாம் மும்பையின் முதல் ஆட்டத்தை தன்னம்பிக்கை மற்றும் துடிப்புடன் ஆடி வென்று அளித்தவர்கள். முதல் இரண்டு ஐ.பி.எல்.களில் மும்பைக்காரர்களிடம் இந்தக் குணாதிசயங்கள் வெளிப்படவில்லை. ஏனெனில் மும்பை அணியின் பாரம்பரிய ஆட்டமுறை நிதானம், பொறுமை மற்றும் ஒழுங்கை அடிப்படையாகக் கொண்டது. வெளி மாநிலத்தவர் வந்த உடன் மும்பையின் மட்டையாட்டம் மேலும் அதிரடியாக, பயமற்றதாக மாறிவிட்டது. மும்பையை ஒரு அசலான T20 அணியாக்கி உள்ளது ஹைதராபாதியும், ஜார்க்கண்ட் இளைஞனும், கூட ஒரு தமிழனும் என்பது சுவாரஸ்யமான சேதி. 2010 மும்பை இந்தியர்கள் பெயர் அளவில் மட்டுமே இந்தியர்கள்.

முரணாக சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அணியில் ரெய்னா மற்றும் பார்த்தீவைத் தவிர வேறு சிறப்பான வெளிமாநில ஆட்டக்காரர்களை வாங்கவில்லை. ஐ.பி.எல். அணிகளிலேயே சொந்த மாநில வீரர்களை அதிகம் சார்ந்துள்ள அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான்: 11 தமிழர்கள். இந்த எதிர்-ஐ.பி.எல். பிராந்திய-சார்பு குணாம் சம்தான் இவ்வணியின் பெரும் பலவீனம். தமிழக வீரர்கள் இயல்பில் சம்பிரதாய ஆட்டக்காரர்கள். மட்டையாட்டத்தில் அனிருத்தா மட்டுமே விதிவிலக்கு. கார்த்திக் மற்றும் அபினவ் ஆகியோர் ஒப்பீட்டளவில் அதிரடியாக ஆடக் கூடியவர்கள் என்றாலும் T20 தேவைக்குத் தங்களைத் தகவமைக்க முடியுமா என்று தெரியவில்லை. முரளி விஜய் மற்றும் பத்ரிநாத்தின் இயல்புக்கு முற்றிலும் மாறுபட்டது T20 கோரும் வேகமும், விதிகளைப் பறக்க விடும் கற்பனையும். தமிழக அணி உள்ளூர் T20 தொடரை வென்றுள்ளது என்றாலும் ஐ.பி.எல்.லின் தரம் முழுக்க வேறானது. இப்படியான பட்சத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி அணியில் ஆடக்கூடிய 7 உள்ளூர்க்காரர்களில் ஐந்து பேர் பெரும்பாலும் T20 திறன்கள் பெறாத தமிழக வீரர்களாகவே இருப்பர். மும்பையைப் போல சென்னை அணியும் வரும் ஐ.பி.எல்.களில் தனது பிராந்திய கற்பை இழக்க வேண்டும். அது வலிமையாகத் திரும்ப அதுவே வழி.

முதல் ஐ.பி.எல். முடியும் தறுவாயில் மாநில அடையாளத்தைக் கறாராகக் கடைப்பிடிக்கும் வகையில் அணிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று ரவி சாஸ்திரி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அப்படியான போக்கு ஐ.பி.எல்.லின் குணாம்சத்துக்கு மாறுபட்டதாகவே அமையும். இந்த வேரற்ற தன்மை ஐ.பி.எல்.லுக்குள் இயங்கும் ஒரு உலகமயமாக்கல் இழுப்பு விசையாகவும் இருக்கலாம்.

வளர்ந்து வரும் இந்தியாவில் மும்பை, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களில் சமூக, பொருளாதார தளங்களில் அன்னிய மாநிலத்தவரின், மொழியினரின், இனத்தவரின் மேலாதிக்கம் ஒரு புகைச்சலை, நிராசையை, வெறுப்பை உள்ளூர்க்காரர்களிடம் ஏற்படுத்தி உள்ளது; இது சிலசமயம் வன்முறையாக, அரசியல் இயக்கங்கள் மற்றும் எழுச்சிகளாக வெளிப்படுவதைப் பார்த்து வருகிறோம். ஐ.பி.எல். எனும் வணிக கலாச்சாரம் இந்த மாநில நிறபேதங்களை, அடையாள முரண்பாடுகளை ஒரு நெருடலற்ற கேளிக்கை ஆக்கி விட்டது. ஒரு பால் தாக்கரேவோ ராஜ் தாக்கரேவோ வெளியேற்ற கோஷங்கள் இடக்கூட வாய்ப்பு தராதபடி ஒரு கலைடாஸ்கோப் தோற்றத்தை தருகின்றன இந்தக் கலப்பு அணிகளும், அவற்றைத் தாங்கும் கார்ப்பரேட் வெளியும்.

THanks R.Abilash uyirmmai

Monday, June 14, 2010

ஒரு சர்ச்சைக்குரிய புத்தகம்

முற்றிலும் வித்தியாசமான சுற்றுச்சூழல் கொண்ட- இயற்கை வெப்பமும் ஆழ்ந்த மனித உணர்ச்சிகளின் கொதிகளனுமாக இருந்த அமெரிக்க தென் கிழக்கு மாநிலங்களில் 30களின் மகத்தான பொருளாதாரத் தேக்ககால பின்புலத்தில் ஒரு கதை பிறந்தால் எப்படி இருக்கும்? மனத்தை மட்டும் உலுக்காது- பூமி நடுங்கும் . பூகம்பம் வெடிக்கும்.

அமெரிக்காவில் இந்தக் கோடை முழுவதும் ஐம்பது ஆண்டுகள் முன்பு பெறும் சலசலப்பை ஏற்படுத்திய அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் நூலகர்கள் வாழ்நாளுக்குள் எல்லோரும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் என்று சிலாகிக்கப்பட்ட புத்தகம். படிக்கவேண்டிய மிக முக்கியமான 10 புத்தகங்கள் பட்டியலில் பைபிள், ஜேன் ஆஸ்டினின் ப்ரைட் அண்ட் ப்ரஜுடிஸ், ஆர்வெல்லின் '84 போன்ற புத்தகங்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த புத்தகம்- ‘To Kill a Mocking Bird’ 1960- ஜூலை மாதம் அமெரிக்காவில் வெளிவந்தது. '62-ல் திரைப்படமாக்கப்பட்டது. மனத்தை நெகிழவைக்கும் பிரதான பாத்திரத்தில் க்ரெகரி பெக் அற்புதமாக நடித்திருக்கிறார். சிறந்த படத்துக்கான ஆஸ்காரைப் பெற்ற கதை. ஆசிரியருக்கு பெருமைமிக்க ‘புலிட்சர்’ பரிசும் அமெரிக்க அதிபரின் விடுதலை விருதும் கிடைத்தது. அதற்குப் பிறகு அவர் வேறு புத்தகமே எழுதவில்லை. இன்னமும் அந்தப் புத்தகத்தைப் பற்றி உலகம் எங்கும் பேசப்படுகிறது. பள்ளிகளில் பாடப்புத்தகமாக வைக்கப்படுகிறது. அமெரிக்காவில் சர்ச்சிக்கப்படுகிறது. வெளிவந்த காலத்திலிருந்து ஆண்டுக்குப் பத்து லட்சம் படிகள் விற்பனை ஆகின்றன. 40 மொழிகளில் மொழிபெயர்ப்பு பெற்ற நாவல். ஜூலையிலிருந்து துவங்கி மூன்று மாதங்களுக்கு அமெரிக்கா முழுவதும் புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சியும் திரைப்படக் காட்சிகளும் நடத்தப்படும்.

ஆனால் அதன் ஆசிரியர் ஹார்பர் லீ என்ற பெண் கூச்சத்துக்குப் பேர் போனவர். விளம்பரத்தை வெறுப்பவர். தான் எழுதிய மாத்திரத்தில் புத்தகத்துக்குக் கிடைத்த பிரபல்யத்தைக்கண்டு அரண்டு தன்னை மறைத்துக் கொண்டவர். அலபாமாவில் தான் பிறந்த சிறிய கிராமத்தில் ஓய்வு மனையில் வசிக்கும் 84 வயது லீ இந்தக் கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளமாட்டார் நிச்சயம்.

அத்தகைய பெண் ஒரு மிகத் துணிச்சலான கதைக் கருவைப் பின்னி புத்தகம் வெளிவந்த உடனடியாக உலகின் பார்வைக்கு வந்தது அதிசயம்தான். இனவாதத்தை மையமாகக் கொண்ட –‘To Kill A Mocking Bird-‘ அமெரிக்காவின் தேசியப் புதினமாகக் கருதப்படுகிறது. அதிகத் துறுதுறுப்புடன் இருந்த ஒரு சிறுமியின் பார்வையில் நகைச் சுவையும் அங்கதமும் இழையோட மிகக் கனமான கதைப் பொருளை மிக லாவகமாக உணர்ச்சிப் பெருக்கில்லாமல் கோஷமில்லாமல் சொல்லப்பட்டிருப்பதே நாவலின் பலம். நட்புகள், குடும்ப உறவுகள், குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்துக்கு வளரும் காலகட்டம் இவற்றிற்கு இடையே சிறுமி தான் காணும் இனவாதத்தையும் கருப்பர்களுக்கு இழக்கப்படும் அநீதியையும் முதியவர்களின் அரசியல் பார்வையில் அல்லாமல், அப்பாவித்தனமாக உணர்ந்து அதிர்வதும் மனத்தளவில் வளர்வதும் மிக இயல்பாக வெளிப்படுகிறது. கருப்பர்களின் ஸிவில் ரைட்ஸ் போராட்டத்தின் இறுதியில் சரியான தருணத்தில் வந்த நாவல். படித்த வெள்ளையருக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்திற்று. கருப்பர்கள் பலருக்கு கருப்பர் பாத்திரம் மேலோட்டமாக எழுதப்பட்டிருப்பதாக அதிருப்தி ஏற்பட்டது.

மேகோம்ப் என்ற சிறிய கிராமம். அங்கு ஸ்கௌட் என்ற சிறுமியும் அவளைவிட நான்கு வயதுப் பெரியவனான அண்ணன் ஜெம்மும் மனைவியை இழந்த தந்தையும் வழக்கறிஞருமான அட்டிக்கஸ் ஃபின்சுடன் வசிக்கிறார்கள். பக்கத்து வீட்டில் தில் என்ற ஒரு சிறுவன் அவளுக்கு நண்பன். அசாத்திய கற்பனைத்திறனும் ஆர்வமும் உள்ளவன். ஸ்கௌட் அவனுக்கு சரியான ஜோடி. இன்னொரு பக்கத்து

வீட்டில் ஒரு மர்ம மனிதர் யார் கண்ணிலும் படாமல் வசிக்கிறார். அவரைப்பற்றின கற்பனைக் கதைகளை இருவரும் பின்னுவதில் மும்முரமாகிறார்கள். அவர்களுக்குத் தெரியாமல் மரத்தடியில் சில பரிசுப்பொருள்களை அவர் விட்டுச் செல்வதை அவர்கள் பின்னால் உணர்ந்து வியக்கிறார்கள். கதையின் முக்கியமான பகுதி நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு. ஒரு கருப்பர்,டாம் ராபின்சன், ஒரு வெள்ளைப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அநியாயமாகப் பழிசுமத்தப்பட்டிருக்கிறான். நேர்மையும் மனித நேயம் மிக்கவருமான அட்டிக்கஸ் ஃபின்ச் டாமுக்காக வாதிட ஆஜராகிறார். கிராமத்து வெள்ளையர்கள் அவரை ஏசுகிறார்கள். சாட்சியங்கள் டாம் குற்றமற்றவன் என்று தெளிவாகக் காட்டியும் ஜூரி அவனுக்கு மரண தண்டனை அளிக்கிறார். சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற டாம் கடைசியில் சுடப்பட்டு இறந்து போகிறான். கருப்பரின் மேல் பழிசுமத்திய வெள்ளைப் பெண்ணின் தந்தை அட்டிக்கஸ்ஸைப் பழிவாங்கும் வெறியில் அலைகிறார். குழந்தைகளையும் துரத்தி தாக்கவரும் சமயத்தில் பக்கத்து வீட்டு மர்ம மனிதர் அவர்களைக் காப்பாற்றுகிறார்.





'Mocking bird' எனும் பறவை யாருக்கும் தீங்கு செய்யாதது , அதைக் கொல்வது பாவம் என்று ஸ்கௌட்டின் தந்தை ஒரு இடத்தில் சொல்வார். இனவாதப் பழிகளின் அடையாளமாக புத்தகத்தின் உருவகத் தலைப்பாக லீ அதை உபயோகிக்கிறார். இந்த நாவல் கிட்டத்தட்ட அவரது சுய சரிதை என்று சொல்லப்படுகிறது. அவருடைய தந்தையும் கருப்பருக்காக வாதாடிய வழக்கறிஞர். முக்கியமாக ஸ்கௌட்டின் சினேகிதன் தில், லீயின் பால்ய நண்பனான ட்ரூமன் கப்போட்டி என்று சொல்லப்படுகிறது. கப்போட்டியும் லீயும் 60களிலும் நண்பர்களாக இருந்தார்கள் . இருவரும் சேர்ந்து ஒரு மொத்த குடும்பம் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்று விவரம் சேகரித்த கதை சுவாரஸ்யமானது. ‘In cold blood’ என்ற புத்தகத்தை கப்போட்டி எழுதி புகழ்பெற்ற விதமும் அது ஏற்படுத்திய பாதிப்பும் அற்புதமாக ட்ரூமன் கப்போட்டி என்ற தலைப்பில் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறது. அதில் ஹார்ப்பர் லீயின் பாத்திரமும் உண்டு. கப்போட்டி லீயின் புகழைக்கண்டு பொறாமைப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

‘In cold blood’க்கான ஆய்வு கப்போட்டியின் மனநிலையை வெகுவாகப் பாதித்தது. லீயைப் பிறகு அவர் சந்திக்கவே இல்லை.

லீயின் புத்தகத்துடன் ‘புக்கர்’ பரிசு பெற்ற அருந்ததி ராய் சம்பந்தப்படுத்தப்பட்டு விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறார். அது வேறு சர்ச்சை.

Sunday, June 13, 2010

முடியுமெனில் சுட்டுத் தள்ளு

தனக்குச் சொந்தமான சூதாட்டவிடுதியொன்றில்,பொறுப்பாளராகவிருக்கும் என்ஸோ (ENZO), 25 மில்லியன் டொலர்களைக் கையாடியிருப்பதாக மாஃபியா தலைவரான கோட்ஃபாதருக்குத் தகவல் கிடைத்தது.

என்ஸோ காதுகேளாத, சற்று வயதான ஒருவர். அதனால் கோட்ஃபாதர்,என்ஸோவுடன் கதைக்கச் செல்வது தனது சட்டத்தரணியுடன்தான். அந்தச் சட்டத்தரணிக்கு சைகை பாஷை தெரியும்.

"என்னிடமிருந்து களவாடிய 25 மில்லியன் டொலர்களும் எங்கே?" என்று என்ஸோவிடம் விசாரிக்கும்படி கோட்ஃபாதர், தனது சட்டத்தரணியிடம் உத்தரவிட்டார். சட்டத்தரணி, சைகை பாஷையை உபயோகித்து அந்தக் கேள்வியை என்ஸோவிடம் கேட்டார்.

'நீங்கள் என்ன கேட்கிறீர்களென்றே எனக்கு விளங்கவில்லை.' என்ஸோ சைகை பாஷையிலேயே பதில் சொன்னார்.

"நாங்கள் எதைப் பற்றிப் பேசுகிறோமென்றே அவருக்கு விளங்கவில்லையென்று அவர் சொல்கிறார்" சட்டத்தரணி,கோட்ஃபாதரிடம் கூறினார்.

தனது கைத்துப்பாக்கியை வெளியே எடுத்த கோட்ஃபாதர், கோபத்தோடு அதனை என்ஸோவின் நெற்றியில் வைத்து, "திரும்பவும் கேள்" என சட்டத்தரணிக்குக் கட்டளையிட்டார்.

'நீ சொல்லவில்லையென்றால் இவர் உன்னைக் கொன்றுவிடுவார்.'சட்டத்தரணி, என்ஸோவிற்கு சைகையில் சொன்னார்.

'சரி. நான் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். பணம் எல்லாவற்றையும் கபில நிற பெட்டியொன்றில் போட்டு, எனது மைத்துனன் புரூனோவின் தோட்டத்தின் கிழக்குப் பக்கமாக உள்ள மதிலிலிருந்து இரண்டு அடிகள் தள்ளி, குழி தோண்டிப் புதைத்திருக்கிறேன்.' என்ஸோ சைகை மொழியில் சட்டத்தரணியிடம் விவரித்தார்.

"என்ன சொல்கிறான் இவன்?" கோட்ஃபாதர், சட்டத்தரணியிடம் கேட்டார்.அதற்கு சட்டத்தரணி இவ்வாறு கூறினார்.

"இவன் சொல்கிறான். முடியுமென்றால் இவனைச் சுட்டுத் தள்ளட்டுமாம்.அவ்வாறு சுடுமளவுக்கு உங்களுக்குத் தைரியமில்லையாம்."

முடியுமெனில் சுட்டுத் தள்ளு

தனக்குச் சொந்தமான சூதாட்டவிடுதியொன்றில்,பொறுப்பாளராகவிருக்கும் என்ஸோ (ENZO), 25 மில்லியன் டொலர்களைக் கையாடியிருப்பதாக மாஃபியா தலைவரான கோட்ஃபாதருக்குத் தகவல் கிடைத்தது.

என்ஸோ காதுகேளாத, சற்று வயதான ஒருவர். அதனால் கோட்ஃபாதர்,என்ஸோவுடன் கதைக்கச் செல்வது தனது சட்டத்தரணியுடன்தான். அந்தச் சட்டத்தரணிக்கு சைகை பாஷை தெரியும்.

"என்னிடமிருந்து களவாடிய 25 மில்லியன் டொலர்களும் எங்கே?" என்று என்ஸோவிடம் விசாரிக்கும்படி கோட்ஃபாதர், தனது சட்டத்தரணியிடம் உத்தரவிட்டார். சட்டத்தரணி, சைகை பாஷையை உபயோகித்து அந்தக் கேள்வியை என்ஸோவிடம் கேட்டார்.

'நீங்கள் என்ன கேட்கிறீர்களென்றே எனக்கு விளங்கவில்லை.' என்ஸோ சைகை பாஷையிலேயே பதில் சொன்னார்.

"நாங்கள் எதைப் பற்றிப் பேசுகிறோமென்றே அவருக்கு விளங்கவில்லையென்று அவர் சொல்கிறார்" சட்டத்தரணி,கோட்ஃபாதரிடம் கூறினார்.

தனது கைத்துப்பாக்கியை வெளியே எடுத்த கோட்ஃபாதர், கோபத்தோடு அதனை என்ஸோவின் நெற்றியில் வைத்து, "திரும்பவும் கேள்" என சட்டத்தரணிக்குக் கட்டளையிட்டார்.

'நீ சொல்லவில்லையென்றால் இவர் உன்னைக் கொன்றுவிடுவார்.'சட்டத்தரணி, என்ஸோவிற்கு சைகையில் சொன்னார்.

'சரி. நான் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். பணம் எல்லாவற்றையும் கபில நிற பெட்டியொன்றில் போட்டு, எனது மைத்துனன் புரூனோவின் தோட்டத்தின் கிழக்குப் பக்கமாக உள்ள மதிலிலிருந்து இரண்டு அடிகள் தள்ளி, குழி தோண்டிப் புதைத்திருக்கிறேன்.' என்ஸோ சைகை மொழியில் சட்டத்தரணியிடம் விவரித்தார்.

"என்ன சொல்கிறான் இவன்?" கோட்ஃபாதர், சட்டத்தரணியிடம் கேட்டார்.அதற்கு சட்டத்தரணி இவ்வாறு கூறினார்.

"இவன் சொல்கிறான். முடியுமென்றால் இவனைச் சுட்டுத் தள்ளட்டுமாம்.அவ்வாறு சுடுமளவுக்கு உங்களுக்குத் தைரியமில்லையாம்."

name